ஆலாபனை

March 29, 2018

 

ஒரு கலைபடைப்பினை மிக விரைவாக செய்துமுடிப்பதென்பது, மிக விரைவாக வாழ்ந்துமுடித்துவிடவேண்டும் என்று எண்ணுவதை போன்ற அபத்தமானது. ஒரு ஓவியம் படைத்தல் ஓட்டபந்தயம் அல்ல, மிக விரைவில் ஓவியத்தினை வரைபவர்களுக்கும்,  மிக அதிகமான ஓவியங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் வரைந்துமுடிப்பவர்களுக்கும் பரிசுகள் கிடையாது.

 

ஒரே ஒரு அடித்தளமான கீற்றினை கொண்ட ஒரு ஓவிய கட்டமைப்பாக இருந்தாலும், அதன் படைப்பு பலமணிநேரங்கள், பலநாட்கள் தொடரும். ஒரு கணப்பொழுதில் ஒரே ஒரு கீற்றுடன் உருவாகும் ஓவியம் ஒரு குறிப்பு மட்டுமே. அது மிக விஸ்தரிப்பான நாளைய  ஓவியத்தின் வரைபடம். அதுவே இறுதி படைப்பல்ல.

 

பிக்காசோ போன்ற பிரபல ஓவியர்கள் சில வினாடிகளில் ஒரு அழகிய உருவத்தினை ஒரு தூரிகையால் உருவாக்குவதை காணும் பொழுது அது அந்த ஓவியரின் திறமையினை வெளிப்படுத்துவது போல தோன்றினாலும், உண்மையில் பிக்காசோ விரும்புவது அந்த கணப்பொழுது நிகழ்வல்ல.

 

அந்த ஒரு கண கீற்றுதல் ஒரு ராகத்தின் சுர வரிசைகளை மட்டுமே பாடுவதை போன்றது. பன்னிரண்டு சுரங்களில், குறிப்பிட்ட சிலவற்றை தேர்ந்தெடுத்து, எந்த சுரத்திற்கு முக்கியத்துவம் என்று அறிந்து, மேல்நோக்கி பாடும் பொழுது பயன்படும் சுரங்கள், அதன் வரிசை, அதுபோல கீழ்நோக்கிய பயணத்தின் வரிசை என்ன என்பதின் அடிப்படையில் உருவாகும் வடிவமைப்பை ராகம் என்று அழைக்கின்றோம். இது ஒரு கையெழுத்து போன்றது. அந்த சிறிய குறிப்பினை கொண்டு மிகப்பெரிய பாடல்கள் இயற்றபடுகின்றன.

 

ஒரு பாடகனோ அல்லது இசைக்கலைஞனோ உண்மையில் விரும்புவது, ஓயாமல் பாடிக்கொண்டிருப்பதும், இசைத்துகொண்டிருத்தலுமே. அதுவே அவர்களின் உத்வேகம். ஒரு மணித்துளியில் ஒரு ராகத்தின் சாயலை மிக அற்புதமாக வெளிபடுத்திவிட்டு அமைதியாக இருப்பதல்ல அவர்களின் நோக்கம். அந்த ராகத்தில் இயற்றபட்டிருக்கும் பாடலை மிகவும் உணர்வுபூர்வமாக அணு அணுவாக அனுபவித்து வெளிப்படுத்துதலில் அவர்கள் லயிக்கின்றார்கள். அந்த ராகத்தின் சுவையில் ஒன்றிய சமயம், அவர்கள் பாடலையும் கூட தாண்டி ஆலாபனையில் ஈடுபடுகிறார்கள். அங்கே தாளம் கூட அவர்களுக்கு முக்கியமல்ல. அந்த நிலையில் பல காலம் அந்த ராகத்தில் சஞ்சரித்து அதை கேட்பவர்களையும் அதில் மூழ்கடித்து தாமும் தம்மை தொலைத்துவிடுகிறார்கள்.

 

மீண்டும் மீண்டும், ஒரே சுரம், மீண்டும் மீண்டும் அதே வடிவம், வெவ்வேறு வரிசைகள், வெவ்வேறு கால அளவுகள், என்று மீண்டும் மீண்டும் அந்த சில ஒலிகளிலேயே பயணிக்கிறார்கள். இது ஒருவகை தியானம். தியானம் என்பது காலத்துடன் போட்டியிடுவதல்ல, காலத்தையே நிறுத்திவிடுதல்.

 

ஒரு ஓவியமோ சிற்பமோ படைக்கப்படும் செயல்பாட்டில் நம்முடைய மனம் அதில் செயல்பட்டு ஒரு பங்கு வகித்தாலும் அது பெரும்பாலும் புலன்சார்ந்த ஒரு செயலாகவே உள்ளது. ஓவிய பொருட்களும் சாதனங்களும் நாம் கைகளால் பயன்படுத்தப்பட்டு இயங்கும் அந்த செயலே நம்மை அதில் உந்திசெல்கின்றது.

 

பல்வேறு எண்ணங்களும், நினைவுகளும், சிந்தனைகளும், உணர்வுக்களும் நிறைந்த ஒரு கூட்டான மனம் கரையத்தொடங்கும் பொழுதே கலையனுபவம் ஏற்பட தொடங்குகிறது. அது ஒரு கணப்பொழுதில் சாத்தியப்படுவதில்லை. மெல்ல மெல்ல அந்த நிலை நோக்கி பயணித்து, மனம் காணமல் போகும்வரை தொடர்ந்து அந்த நிலையில் இருந்து அடையப்படுவது. இந்த நிலைநோக்கிய இயக்கமே ஒரு கலைஞனின் இயக்கம்.

 

'இன் தி ஜோன்' (In the Zone) என்று சொல்லப்படும் அந்த நிலையில் காலமும் இடமும் மறைந்து அனைத்தையும் ஒரு புராதனகாலத்து தொடக்கப்புள்ளியினை போல உணரசெய்துவிடுகின்றது. இந்த அனுபவத்திற்கு நம்மை இட்டுசெல்ல பல பாதைகள் இருந்தாலும் ஒரு கலைஞன் தேர்ந்தெடுக்கும் பாதை அவனுடைய கலை.

 

ஓவியத்தில் இது பல செயல்பாடுகளில் ஏற்படுகின்றது. ஒரு கரித்துண்டு(Charcoal) ஓவியத்தில் இயங்கும் ஓவியன் ஒரு சில கீற்றுக்களுடன் தொடங்கி அந்த கரித்துண்டின்  பல பகுதிகளை உபயோகிக்க தொடங்குகிறான். கூர்மையான முனையினால் சில கீற்றுக்கள், பின்னர் தட்டையான பகுதியினால் சில தீட்டல்கள், என்று அந்த ஓவியத்தினுள் பயணிக்கின்றான், சில மிக மெல்லிய கோடுகள், பின்னர் சற்று அழுத்தம்கொடுத்து தேய்த்தல், அந்த காகிதத்தின் சொரசொரப்பு பகுதிகளில் கரி துகள்கள் புகுந்துக்கொள்ள, மேலும் பல கீற்றுகள், தீட்டல்கள் என்று இயக்கத்தினுள் லயிக்கின்றான். தான் தேடும் வடிவங்கள் உருவாகின்றன, அவ்வடிவங்களை ஒரே கீற்றாக கீற்றிவிடாமல், அதில் மீண்டும் மீண்டும் கரித்துண்டால் பயணிக்கின்றான், ஒரு சிறிய கொடு, ஒரு நெடிய கொடு, விறுவிறுப்பான செயல், மிக நிதானமான செயல், என்று அங்கே நடப்பது ஒரு ஆலாபனை.

 

கரித்துண்டு, தைலவண்ணம், களிமண் போன்ற சில பொருட்களும் சாதனங்களும் இந்த செயல்பாட்டிற்கு இயற்கையாகவே ஒத்துழைக்கின்றன, அவற்றை தொடர்ந்து தடையின்றி மாற்றியபடி ஒரு படைப்பாளியால் இயங்கமுடியும், நீர்வண்ணமோ அல்லது பல செயல்முறைகளை கொண்ட படைப்புகளோ நம் கவனத்தினை அதிகம் ஈர்த்து மனதினை மிக விழிப்புடன் வைத்துவிடும், காலப்போக்கில் இதில் தேர்ச்சிபெற்ற கலைஞன் அதிலுமே மிக எளிதாக லயித்துவிடுகின்றான்.

 

கடினமான பாராங்கல்லில் பல தசமங்கள் சிற்பங்கள் செதுக்கிய சிற்பிக்கு அது களிமண்போல மிருதுவாக மாறிவிட்டிருக்கும்.

 

இந்த செயல்பாட்டில் மனம் ஒருவகையில் இயங்கிகொண்டு வடிவங்களை சரி பார்த்தல், ஒளிதிண்மையினை கவனித்தல், அவை மாறுபடும் தன்மை, கீற்றுகளின் ஆதிக்கத்தினை கட்டுபடுத்துதல் என்று விழிப்புடன் இருந்தாலும், அது உண்மையில் பின்னணியிலேயே இருக்கின்றது, இந்த செயலில் ஓவியன் மேலும் மேலும் ஈடுபட, அது இறுதியில் காணாமலே போய்விடுகின்றது.   

 

இங்கே நாம் காண்பது ஃபாவிசத்தின் தந்தையென கருதப்படும் பிரெஞ்சு ஓவியர் ஹான்ரி மத்தீஸ் (Henri Matisse) 1905ஆம் ஆண்டு தீட்டிய தொப்பியணிந்த பெண் (Woman with a Hat) எனும் தலைப்புகொண்ட தைலவண்ண ஓவியம். பல வண்ணங்களை மிக அடர்த்தியாக பயன்படுத்தி, அதில் மத்தீஸ் கீற்றுகளிலும், வடிவங்களிலும் ஒளிதிண்மையிலும் தன்னை முழுதும் தொலைத்துவிட்ட நிலை நமக்கு தெரிகின்றது.

Share on Facebook
Share on Twitter
Please reload

Featured Posts

மனதின் பருவகாலங்கள்

July 12, 2017

1/1
Please reload

Recent Posts

February 1, 2019

April 13, 2018

March 29, 2018

Please reload

Search By Tags
Please reload

Follow Me
  • Facebook Classic
  • Instagram - Black Circle
Instagram

© 2020 by Ganapathy Subramaniam