top of page

தபாலில் வந்த ஓவிய பாடங்கள்



அமெரிக்காவில் நாற்பதுகளில் தொடங்கி ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஓவியம் என்பது மிக பெரிய ஒரு உத்தியோகமாக வளர்ந்துவிட்டிருந்தது. குறிப்பாக சித்திரக்கதை ஓவியர்கள் அன்றைய ஹாலிவூட் சினிமா நட்சத்திரங்களை போல மிக அதிக வருமானம் உடையவர்களாகவும் ஆடம்பரமான வாழ்கை முறையினை கொண்டவர்களாகவும் விலையுயர்ந்த வாகனங்களில் வலம் வந்தார்கள்.


ஃப்ளாஷ் கார்டன் (Flash Gordon), ரிப் கார்பி (Rip Kirby) போன்ற மிக பிரம்மாண்டமான காமிக்ஸ் தொடர்களை தந்த ஓவியர் அலெக்ஸ் ரேய்மன்ட்(Alex Raymond) ஒரு ராக் ஸ்டார் அந்தஸ்தை பெற்றிருந்தார். அவருடைய ஆடைகள், அலங்காரம், வசீகர தோற்றம் ரசிகர்களை ஈர்ப்பதில் அவருடைய அதியற்புத படைப்புகளுடன் போட்டிபோட்டன.


அந்த கால கட்டத்தில் பதின்மங்களில் இருந்த பலரும் தாமும் இது போல ஒரு பிரபலம் ஆகவேண்டும் என்று கனவு கண்டு ஓவியம் பயிலதொடங்கினார்கள். மிக குறைந்த அளவிலேயே ஓவிய கல்லூரிகள் இருந்த காலம் அது. மேலும் கல்லூரிக்கு சென்று பயில்வதென்பது அனைவராலும் சாத்தியபடாத நிலை. அமெரிக்கா பறந்து விரிந்து இருந்தது, முக்கிய நகரங்களில் மட்டுமே தரமான கல்லூரிகளும் கல்வியும் கிட்டியது.


இந்த சூழலை கவனித்துவந்த தொழில்முறை ஓவியர் ஆல்பர்ட் டோர்ன் (Albert Dorne), இங்கே ஒரு பெரிய வாய்ப்பிருப்பதை உணர்ந்தார். குஸ்தி வீரராக இருந்து ஓவியரான டோரன் பிரசித்திபெற்ற பதினோரு பிற ஓவியர்களைக் ஒன்று திரட்டி, அவர்களை ஆசிரியர்களாக கொண்ட ஒரு ஓவிய பள்ளியினை கனெக்டிகட் மாகாணத்திலுள்ள வெஸ்ட்போர்ட் (Westport, Connecticut) நகரத்தில் 1948ஆம் ஆண்டு நிறுவினார். இந்த பள்ளியின் சிறப்பம்சம் அங்கே பாடங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதே!


ஆமாம் அங்கே வகுப்பறைகள் இல்லை, மாணவர்கள் வருவதில்லை, பாடங்களும் இல்லை, உரையாடல்களும் இல்லை, இதென்ன விசித்திரமான பள்ளிக்கூடம் என்று நாம் சிந்தித்தால் அது ஒரு தபால் வழி பள்ளி என்பது புலப்படும்.


பாடங்கள் மாணவர்களை அவர்கள் வீடு தேடி தபால் மூலம் வந்து சேரும், அவர்கள அதனை படித்து, பயிற்சிகளை எல்லாம் பழகி, பின்னர் அந்த பாடத்தின் இறுதியில் அளிக்கபட்டிருக்கும் பணியினை பூர்த்திசெய்யவேண்டும், அதனை இந்த பள்ளிக்கு தபால் மூலமாக அனுப்பிவைக்கவேண்டும். அவ்வாறு அனுப்பப்பட்ட ஓவியங்களை அங்கிருக்கும் ஆசிரியர் கண்காணித்து, திருத்தல்களை குறிப்பிட்டு மீண்டும் அந்த மாணவருக்கே அனுப்பி வைப்பார். இதுவே அந்த பள்ளியின் செயல்முறை.


அந்நாளைய ஓவிய ராக் ஸ்டாராக விளங்கிய நார்மன் ராக்வெல் (Norman Rockwell) அந்த ஆசிரியர் குழுவில் இருந்தார் என்றால் அந்த பள்ளியின் உயர் தரத்தினை நாம் கற்பனை செய்துகொள்ளல்லாம்.


ஃபேமஸ் அர்டிஸ்ட்ஸ் ஸ்கூல் (Famous Artists School) என்று அழைக்கப்பட்ட அந்த பள்ளியில் மூன்று பிரிவுகள் இருந்தன. அவைகள் கதைகளுக்கான சித்திரம் வரைதல்(Illustration), கேலிசித்திரம் வரைதல்(cartooning) மற்றும் ஓவியம் தீட்டுதல்(Painting). ஒவ்வொரு பிரிவிலும் சரியாக இருபத்தி நான்கு பாடங்கள் என்று மிக உயர்ந்த தரத்திலான பெரிய அளவு காகிதத்தினில் மிக தெளிவான விரிவான விளக்கங்களை கொண்டது அந்த படிப்பு.


ஆயிரக்கணக்கில் மாணவர்கள் இதில் உற்சாகத்துடன் சேர்ந்தார்கள், பின்னாளில் பல வெற்றிகரமான ஓவியர்கள் காமிக்ஸ், அரசியல் கார்டூனிங், அனிமேஷன், கதைகளுக்கான சித்திரம் என பல துறைகளில் இந்த பள்ளியின் பாடங்களின் மூலமாக உருவானார்கள்.


அமெரிக்காவில் இவ்வாறு ஒவியம் பயில ஒரு புதிய சாத்தியம் உருவாகிய சில ஆண்டுகளில் சென்னையில் உருவானது ஒரு தபால் வழி ஓவிய பள்ளி. அதுவே சந்தனு சித்திர வித்யாலயம். அதைப்போலவே மிக விரிவான பெரிய அளவு காகிதங்களில் பாடங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டன. ஓவியம் பயில்வதர்க்கான பொருட்களில் தொடங்கி, அடிப்படை பயிற்சிகள், பாடங்கள் என உருவப்படங்கள், முக பாவனைகள் (Expressions), உடற்கூறியல்(Anatomy), உளக்காட்சி (Perspective), என்று பல விதமான பாதைகளில் மாணவர்களை இட்டு சென்றது. கதைகளுக்கு சித்திரம் வரைவது, அதிலுள்ள பல நுணுக்கங்கள், உத்திகள், என்று பல ஆயிரம் ஓவியங்களை கொண்ட பயிற்சி தொகுப்பாக அது விளங்கியது. நீர்வண்ணம், தைல வண்ணம் என ஓவியம் தீட்டுதலிலும் பல பாடங்கள் அமைந்திருந்தன.


எழுபது எண்பதுகளில் மிகவும் வெற்றிகரமாக இயங்கிவந்த இந்த பள்ளியில் பல லட்சம் மாணவர்கள் நாடு முழுவதிலிருந்தும் பயின்றனர். அதன் விளம்பரங்கள் பெரும்பாலான பத்திரிகைகளில் வெளிவந்து ஓவியம் பயிலவிரும்புவோரை ஈர்த்து சேரவைத்தது.


அம்புலிமாமா, ரத்தினபாலா, பாலமித்ரா போன்ற அருமையான சிறுவர் இதழ்களில் வரும் ஓவியங்களையும், சித்திரகதைகளையும், ரஷிய கதை புத்தகங்களில் தோன்றிய நீர்வண்ண ஓவியங்களும், அமெரிக்க பிரிட்டிஷ் காமிக் புத்தகங்களின் அசரவைக்கும் ஓவிய கதைகளையும், மேலும் தமிழ் வார இதழ்களை அலங்கரித்த பல திறமையான ஓவியர்களின் சித்திரங்களையுமெல்லாம் கண்டு வியப்புற்று ஓவியம் பயிலவேண்டும் என்ற ஒரு உத்வேகத்தில், சந்தனுவின் சித்திர வித்யாலயத்தில் நானும் சேர்ந்தேவிட்டேன்.


அமெரிக்காவின் பள்ளியை போலவே, மாதம் இரு முறை புதிய பாடங்கள் தபால் மூலம் மாணவரின் இல்லத்தை தேடிவரும். அதனை நன்கு படித்து, பயின்று அதிலுள்ள பயிற்சிகளை பூர்த்தி செய்து குறிப்பிட்ட நாளுக்குள் பல்லின் முகவரிக்கு அனுப்பிவிடவேண்டும்.


திருத்தப்பட்ட படங்களுக்காகவும், புதிய பாடங்களுக்காகவும் தபால்காரரை எதிபார்த்து காத்திருக்கும் அனுபவமும், பயிற்சி ஓவியங்களையும், கட்டணத்தினை மணி ஆர்டரிலும் அனுப்புவதர்க்காக அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு செல்வது என்பதும், மிகவும் அமைதியான எண்பதுகளில் எனக்கு ஓவியம் பயில்வதைகாட்டிலும் மிகவும் உற்சாகமான செயல்களாக அமைந்தன.


இணையமில்லாத ஒரு காலத்தை நம்மால் இன்று கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை, தொலைபேசியே அதிசயம் என்றிந்த அந்த காலகட்டங்களில் ஃபேமஸ் அர்டிஸ்ட்ஸ் ஸ்கூல் மற்றும் சந்தனு சித்திர வித்யாலயம் போன்ற தபால் வழி கல்விக்கூடங்கள் ஓவியம் கற்பித்தலில் ஒரு மிகப்பெரிய பணியினை ஆற்றின.

bottom of page