top of page

ஓவியப்பயணமும் கூழாங்கற்களும்


ஒரு கலைப்படைப்பினை பொதுவாக அணுகுவது அனுபவரீதியாக இருக்கவேண்டும். சிந்தனைகள் மற்றும் அறிதல் எல்லாம் களையப்பட்ட நிலையில் மிக எளிமையானதொரு அணுகுதலில் உண்மையானதொரு கலையனுபவம் நமக்கு கிட்டுகின்றது.


நாம் பல ஓவியர்களின் படைப்புகளை காண்கிறோம். அதில் வேறுபாடுகள், ஒற்றுமைகள், காணப்படும் பொருட்கள் , வண்ண கலவைகள், அவை தொகுக்கப்பட்ட விதம் என்று எண்ணிலடங்கா வகைகளில் வெவ்வேறு ஓவியர்கள் உருவாக்குகிறார்கள். ஓவிய தனிமங்களினை தமக்கே உரிய முறையில் கையாண்டு தனித்தன்மையோடு படைக்கிறார்கள்.


இவ்வாறு பல்லாயிரக்கணக்கான ஓவியங்களில், ஒரு ஓவியரின் படைப்புகள் என்பதின் இன்றியமையாத தன்மை என்பதை நாம் உணர முடியுமா ? ஒரு குறிப்பிட்ட ஓவியரின் படைப்புகளை எவ்வாறு அணுகுவது ? உதாரணத்திற்கு பிக்காஸோவின் ஓவியங்களை பார்த்தோமேயானால் அது ஒரு தனித்தன்மை வாய்ந்ததென்று புரியும். சிறிது அறிதலின் மூலம் அது க்யூபிஸம் என்பது தெரியவரும். மேலும் ஆராய்ந்தோமேயானால் க்யூபிஸத்தின் கோட்பாடுகள் தெரியவரும். அவர் பல முன்னோடிகளின் பாதையில் எவ்வாறு பயணித்து அவருடைய பாணியை அடைந்தார் என்றும் அறியலாம். இந்த அணுகுமுறை அறிதலும் புரிதலும் சார்ந்தது, வாசிப்பின் மூலமாக நாம் அடைவது. அறிதல் மற்றும் கோட்பாடுகளையெல்லாம் தவிர்த்து எவ்வாறு அவரின் படைப்புகளை அணுகுவது?


இதற்கு நாம் முதலில் ஒரு ஓவியரின் படைப்புதொடர் பற்றி சற்று சிந்திக்க வேண்டும். பல ஆண்டுகள் பல ஆயிரம் ஓவியங்கள் கொண்டது ஒரு கலைஞனின் பயணம். அந்த ஓவியத்தொடர் தான் நமக்கு அவர் கொடுக்கும் பாதை. அதற்கு பல பெயர்கள் சூட்டினாலும், பல கோட்பாடுகளை பொறுத்தினாலும், அதையெல்லாம் தாண்டி அந்த தொடர் மாத்திரமே உண்மையான வழிகாட்டி. அது போதுமானதும் கூட. பிக்காஸோவின் நூற்றுக்கணக்கான ஓவியங்களை முறையே அவர் உருவாக்கிய வரிசையில் நாம் கண்டு அனுபவித்து வந்தாலே அவர் ஓவியங்கள் நமக்கு அருமையான அனுபவங்களை தந்துவிடும்.


ஒரு ஓவியனின் பயணம் என்பது, ஒரு கடற்கரையோரம் , கூழாங்கற்களை தேர்ந்து சேகரிக்கும் ஒரு சிறுவனின் செயலை ஒத்தது. மிக அமைதியாக அவன் கடல் மணல் பரப்பை நோக்கியபடியே நடந்து சென்றுகொண்டிருப்பான். பல கற்கள் பல வண்ணங்களிலும், அளவுகளிலும், வடிவங்களிலும், பல விதத்தில் அவன் கண்களுக்கு தென்படும். சிலவற்றை அவன் கையிலெடுத்து அதனை தடவி பார்ப்பான் , உற்று நோக்குவான், சூரிய ஒளி அதன் மீது பட்டு தெறிக்கும் விதத்தினை ரசிப்பான், சிறிது நேரம் அதனை வைத்திருந்து பின் மெல்ல எறிந்தும் விடுவான். மிக மிக சிலவற்றை அவன் தன் பைக்குள் பத்திரமாக போட்டுக்கொள்வான். அவனுடைய இந்த பயணம் நாட்கள் மாதங்கள் வருடங்கள் என்று அவன் வாழ்நாள் முழுதும் நீடிக்கும். இவ்வாறு அவன் தன் கடற்கரையோர பயணத்தில் பல கூழாங்கற்களை சேகரித்திருப்பான்.


நாம் ஒரு சமயம் அவனிடம் அந்த கற்களையெல்லாம் வாங்கி பார்தோமேயானால் அவைகளுக்குள்ளெல்லாம் ஒரு அழகானதொரு ஒற்றுமை தெரியும். ஏதோ ஒரு விதத்தில் அவை ஒரு குடும்பத்தை சார்ந்தது போலவே இருக்கும். ஒரே வண்ண குடும்பத்தை சார்ந்திருக்கலாம் , ஒரே தோற்றத்தில் இருக்கலாம் , ஒத்த வடிவங்களில் என்று சார்ந்த தன்மைகளுடைய அந்த கூழாங்கற்கள் அவனின் தனி படைப்புகளே. அந்த சேகரிப்புக்களை நாம் அறிவுபூர்வமாக ஆராயவேண்டிய அவசியமில்லை, அப்படி செய்தால் நாம் புவியியலாளர்களாக மாறிப்போயிருப்போம். அவை கொடுக்கும் அனுபவத்தினை தவறவிட்டிருப்போம்.


அவனிடம் வாங்கி பார்த்த அனைவருக்கும் அக்கற்கள் ஒரே அனுபவத்தினை கொடுப்பதில்லை. அரிதான அனுபவத்தினை பெறுபவர்கள் அவனை புகழ்ந்து சில கற்களை வாங்கியும் செல்வார்கள். சிலர் மீண்டும் மீண்டும் வந்து பெற்றுக்கொள்வார்கள். ஒரு சில சமயம் பலர் வந்து அவன் சேகரிப்புகளையெல்லாம் பெற்றும்விடுவார்கள். அவனென்னவோ இதையெல்லாம் பெரிதும் பொருட்படுத்தாதவனாய் தனக்கு தோன்றியபடியே தன் சேகரிப்புகளை தொடர்வான். சில வேளைகளில் யாருமே அந்த கற்களை பெரிதும் கண்டுகொள்வதில்லை, இருந்தும் அவன் கடற்கரையோர பயணங்கள் முடிவதில்லை.


சில கூழாங்கற்களை அவன் கையிலெடுத்து அதனை தடவி பார்ப்பான் , உற்று நோக்குவான், சூரிய ஒளி அதன் மீது பட்டு தெறிக்கும் விதத்தினை ரசிப்பான்


சில சிறுவர்கள், எந்த கற்கள் அதிகம் ரசிக்கப்படுகின்றதோ அதனை சேகரிக்க தொடங்குவார்கள், அவர்கள் எந்த கற்கள் விற்கும் என்பதில் தேர்ச்சியும் அடைவார்கள், அவர்கள் கூழாங்கல் வியாபாரிகளாவே ஆகிவிடுவார்கள், சில சமயம் மற்ற பிற சிறுவர்களை கொண்டு இதனை ஒரு வர்த்தகமாகவே செய்வார்கள். அவர்களுடைய சொந்த பயணமோ காணாமற்போயிருக்கும். அவர்கள் கற்கள்வாங்குவோரின் ஓட்டுநர்களாக மாறி அவர்களின் பயணத்திற்கு தாவியிருப்பார்கள். இதிலெல்லாம் நாட்டமில்லாமலும், சலனப்படாமலும் ஓரிரு சிறுவர்கள், தாம் விரும்பிய கற்களை முன்போலவே சேகரித்துக்கொண்டு செல்வார்கள். காலப்போக்கில் அவர்களின் தேர்வு மிக மிக அற்புதமான கற்களை கொண்டு சேர்க்கும். இதுவரை யாருமே பார்க்காத கற்கள் ஏராளம் இருக்கின்றன, அந்த ஓரிரு சிறுவர்களுக்காக அவை பல ஆயிரமாண்டுகள் ஆனாலும் காத்துக்கொண்டிருக்கும்.

.

ஒரு ஓவியனின் படைப்புகளும் இது போன்றதே. பல தொகுப்புகளை கொண்டிருக்கும் அவனது பயணம், அந்த தொகுப்புகளிலெல்லாம் ஒரு ஓற்றுமை தெரியும், காலப்போக்கில் பல பரிணாம வளர்ச்சியினையும் நாம் அந்த படைப்புகளில் அறிய நேரிடும். இந்த தொடர் படைப்புகளை நாம் ரசித்து மெல்ல அனுபவித்த வண்ணம் அவன் தேடல்களில் பயணிக்கலாம். அவன் பயணம் நமக்கு ஒரு அறிய அனுபவத்தினை கொடுக்குமேயானால், அதில் ஓரிரு படைப்புக்களை நாமும் அவனிடமிருந்து பெற்று நமதாக்கிக்கொள்ளலாம். அறைகளை நிரப்பும் வெறும் அலங்கார பொருளாக மட்டுமேயல்லாமல் , அப்படைப்புகளை அவன் தேடலின் நினைவாகவே நாம் பொக்கிஷமாக வைத்துக்கொள்ளவேண்டும்.


கொள்கைகள், கோட்பாடுகள், கதைகள், சரித்திரம் இவையெல்லாம் அறிவிற்கும் புத்திக்கும் தீனியாக அமையலாம் ஆனால் அனுபவமாக நாம் கொள்வது இந்த ஓவிய தொடர் நமக்கு காட்டும் பாதையில் நாம் மேற்கொள்ளும் எளிய பயணம் மட்டுமே.


இங்கே இணைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள் பிக்காஸோவின் காளைகள் ( Bull ) , இந்த பதினோரு ஓவியங்கள் 1946ல் சுமார் ஆறு வார இடைவெளியில் அவர் கீற்றியது.அவருடைய நெடும்பயணத்தினை அவரே நமக்கு சுருக்கி சொல்லும் ஒரு சிறிய தொடர் இது.

18 views0 comments
bottom of page