top of page

கற்றல்


தானாகவே செயல்படக்கூடிய ஒரு மனித இயந்திரத்தினை (Robot) உருவாக்கும் முயற்சியில், கண்பார்வை எனும் திறமை இன்றியமையாதது. இந்த இயந்திரம் என்பது அடிப்படையில் ஒரு கணினி. ஒரு கணினிக்கு நாம் இடும் கட்டளைகளின் கோப்பே அடித்தளம். கட்டளைத் தொடர்களின் மூலமே அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்தமுடியும். கணினிக்கு கண்ணை அளிக்கும் முயற்சி பல காலங்களாக இதே அடிப்படையில் அணுகப்பட்டு தொடர்ந்து தோல்வியைத் தந்து வந்தது.


நம்முடைய கண்கள் எவ்வாறு செயல்படுகின்றது, அந்த கண் எனும் கருவி தரும் தகவல்களைக்கொண்டு நம்முடைய மூளை எவ்வாறு இவ்வுலகினை அறிந்துகொள்கின்றது என்று தீவிரமாக ஆராய்ந்து அதன் முழு செயல்பாடுகளையும் ஒரு கணினியாலேயே செய்யமுடியுமென்று நம்பிக்கைகொண்டு அதனை இறுதியில் சாத்தியமாக்கிய விஞ்ஞானிகள் ஒரு மிக எளிமையான புதிய பாதையினை கண்டெடுத்தார்கள்.


முதலில் இதை செய், அடுத்தது இதை செய், பின்னர் இந்த செயல், என்று ஒரு மிக தெளிவான கட்டளைகளின் மூலம் நாம் ஒருவருக்கு ஒரு செயல்பாட்டினை சொல்லித்தரமுடியும். உதாரணத்திற்கு ஒரு சமையல் குறிப்பை நாம் பார்த்தால், அதில் மிக தெளிவாக நமக்கு தேவையான பொருட்கள், அதன் குறிப்பிட்ட அளவுகள், பின்னர் நாம் செய்யவேண்டிய செயல்கள் என்று சீராக ஒன்றன்பின் ஒன்றாக கொடுக்கபட்டிருக்கும். அதனை உள்ளது உள்ளவாரே நாம் பின்பற்றினால் அந்த குறிப்பிட்ட உணவை தயாரிப்பது எப்படி என்று நாம் கற்றுகொண்டுவிடுவோம். இதையே நாம் பொதுவாக கற்கும் விதமாக கொண்டுள்ளோம்.


ஆனால் எல்லாவித செயல்பாடுகளும் இதுபோன்றதல்ல. உதரணத்திற்கு நாம் எவ்வாறு பேசக் கற்றுகொள்கிறோம், பார்க்க கற்றுகொள்கிறோம், நடக்கக் கற்றுகொள்கிறோம் என்று பார்த்தால், அதனை இதுபோன்று ஒரு கட்டளைகளின் மூலம் கற்பிக்கமுடியாதென்று நாம் உணர்ந்துவிடுவோம். நாம் கண்களை கொண்டு ஒரு காட்சியினை எவ்வாறு காண்பதென்பது நாமாகவே பெற்றுவிடும் ஒரு திறன், அதனை யாரும் நமக்கு சொல்லித்தருவதில்லை. கண் இமைகளை இந்த அளவிற்கு திறக்கவேண்டும், ஒரு இடத்தினை உற்று நோக்கவேண்டும், பின் மெதுவாக இடதுபக்கத்திலிருந்து வலது பக்கமும், பின்னர் மேலிருந்து கீழேயும் பார்வையை செலுத்தவேண்டும், என்பது போலெல்லாம் நாம் சொல்லிகொடுப்பதில்லை.


முதலில் உளறத்தொடங்கி பின்னர் பிறர் பேசுவதை கேட்டு கேட்டு, தானும் பெசகற்றுகொள்கிறோம், அதுபோலவே நாமாகவே தவழதொடங்கி, தடுமாறி, அமர்ந்து நின்று இறுதியில் நடந்து ஓட கற்றுகொள்கிறோம், நம் கண்களும் இதுபோன்று தானாகவே காண கற்றுகொள்கின்றன. யாரும் குறிப்புகள் கொடுத்து கற்பிக்காமலேயே நம் திறன்கள் இதுபோல வளருவதை கவனித்து புரிந்துகொண்ட கணத்தில் விஞ்ஞானிகள் கணினிக்கு பார்வை அளிப்பதெப்படி எனும் புதிருக்கும் விடைகண்டார்கள்.


மனித மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆர்டிபிசியல் ந்யூரல் நெட்வொர்க் (Artificial Neural Network) எனும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் கணினிக்கு தானாகவே கற்றுக்கொள்ளும் திறனை உண்டாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவுத்துறை இன்று நம் வாழ்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் நுழைந்து நம்முடைய அன்றாட தேவைகளை மிக எளிதாக்கி வாழ்கை தரத்தினை மேம்படுத்தியவண்ணம் உள்ளது.


கலைத்துறையில் இந்த தொழில்நுட்பம் அதிவேகமாக பயன்பாட்டில் வந்து இசை மற்றும் காட்சிகலைகளில் கலைஞர்களுக்கு புதிய சாத்தியங்களை ஏற்படுத்திவருகிறது.


கூகிள் நிறுவனத்தின் முயற்சியான மஜெந்தா எனும் சாதனம் பிற கலைஞர்களை பார்த்து தானாகவே இசையமைத்தலையும், ஓவியம் தீட்டுதலையும் கற்றுகொள்கிறது. உலகெங்கும் உள்ள கலைஞர்கள் பல ஒவியங்களை தீட்டி அந்த ஓவியத்தில் என்ன தீட்டியுள்ளார்கள் என்பதை அவர்கள் சொல்ல, அவற்றையெல்லாம் கவனித்து உள்வாங்கி, அதிலிருந்து பல உருவங்களை வரைவதை கற்றுகொள்கிறது மஜெந்தா. மிக ஆரம்பகட்ட நிலையிலேயே தற்போது (ஜனவரி 2019) உள்ள இந்த சாதனம் மிக குறுகிய காலத்தில் வேறு பரிமாணத்தினை எடுக்கும் என்றே தோன்றுகிறது.


இந்த பரிசோதனைகளும் முயற்சிகளும் ஒரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றத்தினை கொண்டுவரும் அதே சமயம் நமக்கு வேறு ஒரு கோணத்தில் ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது. கற்றல் கற்பித்தல் எனும் அடிப்படையான செயல்பாட்டில், குறிப்பாக படைப்பு சார்ந்த துறைகளில் எவ்வாறு நாம் சீரிய முறையில் இயங்கமுடியும் என்பதை சிந்திக்க வைக்கின்றது.


கணினிக்கு கற்றுத்தரும் முயற்சிகளை இரண்டு விதமாக பிரிக்கிறார்கள் விஞ்ஞானிகள். கண்காணிக்கப்பட்ட கற்றல் மற்றும் கண்காணிக்கப்படாத கற்றல் (Supervised and Unsupervised learning) என்று இரண்டு விதமாக கணினி கற்கின்றது. கல்வி என்பது தெரிந்த ஒரு விஷயத்தினை ஒருவர் மற்றவருடன் பரிமாறிக்கொள்வது எனும் அடிப்படையில், கண்காணிக்கப்பட்ட கற்றல் நிகழ்கிறது. கணினியிடம் ஒரு விஷயத்தினை கூறி அதன் தன்மைகளை கற்பித்தல். உதாரணத்திற்கு வட்ட வடிவத்தினை வரைந்து அது 'வட்டம்' என்று சொல்லித்தருவது, அதை போலவே சதுர வடிவத்தினை வரைந்து அதற்கு 'சதுரம்' என்று பெயர் என்று கூறுவது.


கண்காணிக்கப்படாத கற்பித்தலில், எந்த தகவலையும் பயிற்றுவிப்பவர் கொடுக்காமல் பல உள்ளீடுகளை கணினிக்கு அளித்து தானாகவே அவற்றைபற்றிய ஒரு புரிதலை அடைய செய்கின்றோம். உதாரணதிற்கு பல வட்ட வடிவங்கள், சதுர வடிவங்கள் கணினி முன் வைக்கபடுகின்றன, அவற்றையெல்லாம் மீண்டும் மீண்டும் காணும் கணினி தானாகவே இவ்விரண்டு வடிவங்களை வெவேறானவை என்று உணர்ந்து, எந்த அடிப்படையில் அவை வேறுபடுகிறன என்பதையும் அறிந்துகொள்கிறது.


கலை கல்வியில் ஒரு ஓவிய மாணவன் தானாகவே கற்றுகொள்ளுதலும் தனக்கேயான பிரத்தியேக புரிதல்களை அடைவதன் முக்கியத்துவத்தையும் நாம் இங்கே உணரமுடிகின்றது.


அடிப்படை திறனை வளர்த்துகொள்ளுதலில் ஆசிரியரின் கண்காணிப்பில் மாணவன் இயங்கி உருவப்படம், உளக்காட்சி, வண்ண சேர்க்கை, கட்டமைப்பு போன்றவற்றை கற்ற பின்னர், தன்னுடைய கற்பனையின் வளத்தினை வளர்க்கும் வண்ணம் தானாகவே பல பரிசோதனைகளை செய்வது, தனக்கென ஒரு பார்வையினை உண்டாக்கி புதிய விளக்கங்களையும் கோணங்களையும் கண்டெடுப்பது எனும் செயல்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கபடவேண்டும்.


எல்லைகளற்ற திறமை கொண்ட மனித படைப்பாற்றல், தடைகளற்ற பரிசோதனைகளுக்கு ஒருதளம் அமைக்கப்பட்ட பொழுதே மிகவும் வளம் பெற்று பல புதிய வடிவங்களை உருவாக்கியவண்ணம் உயிர்பித்து விளங்கும்.


இங்கே நாம் காணும் "கடுமையான பாதை" (பிரெஞ்சில் Sentier aigu) எனும் தலைப்புகொண்ட ஓவியம் 1961ஆம் ஆண்டு ரஷ்ய/பிரெஞ்சு ஓவியர் ஆண்ட்ரே லான்ஸ்கோய் (André Lanskoy) தீட்டியது. ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் பிறந்த லான்ஸ்கோய், போர்முனை போன்ற பல பாதைகளில் பயணித்து ஓவியமே தன் பாதை என தீர்மானித்து பல ஆயிரம் அற்புத ஓவியங்களை தன் வாழ்நாளில் படைத்தவர். தன்னுடைய பத்தொன்பதாவது வயதில் பிரான்ஸ் நாட்டிற்கு இடம்பெயர்ந்த அந்த நாளை நினைவுகூர்ந்து அவர் கூறியது, "நான் பாரிசுக்கு வந்த தினத்தன்றே ஓவியம் தீட்டதொடங்கிவிட்டேன் இன்றுவரை நிறுத்தவில்லை". கவித்துவ அரூபம் (Lyrical Abstraction) எனும் பாணியின் உச்சத்தை தொட்ட இந்த அற்புத ஓவியர் எந்த ஓவியக்கல்லூரிக்கும் செல்லாமல் தானாகவே கற்றுக்கொண்ட ஒரு செல்ப் டாட் ஆர்டிஸ்ட்.

bottom of page