அறிதலும் அனுபவித்தலும்

March 1, 2018

 ஒரு கலைப்படைப்பினை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? அதனை எவ்வாறு முறையாக அனுபவிப்பது? இந்த கேள்வி நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. பொதுவாக நாம் வாழ்க்கையில் நிகழ்வுகளை எவ்வாறு எதிர் கொள்கிறோம், எவ்வாறு அனுபவிக்கின்றோம் என்று பார்த்தோமேயானால் இதற்கும் விடை கிடைக்கும்.

 

நாம் பெரும்பாலும் வர்ணனைகளை சார்ந்தே வாழ்கின்றோம். எந்த ஒரு பொருளை நாம் முதலில் கண்ட போதும் "அது என்ன?" என்ற கேள்வியே பெரும்பாலும் நம் மனதினில் எழும்புகிறது. அதன் பின் அது பற்றி விரிவாக நாம் அறியும் ஆவல் ஏற்படுகின்றது. அறிதல் என்பதும் அனுபவித்தல் என்பதும் வெவேறு செயல்கள் . அறிதல் என்பது எல்லைக்கோடுகளின் உதவியுடன் பொருட்களை வடிவங்களாக வேறுபடுத்தியும் , பின்னர் ஒன்று படுத்தியம், பெயர்கள் சூட்டியும் மனதினாலும் புத்தியின் உதவியுடன் சிந்திப்பதாகும். 


மாறாக நம்முடைய ஐந்து புலன்களின் உதவியுடன் மாத்திரமே நாம் எதிர்கொள்வது அனுபவம். அது சிந்தனைகளற்ற ஒரு அனுபவம். நாம் காணும் காட்சியுடன் ஒன்றாக நாம் கலந்து , எல்லைக்கோடுகளை களைந்து நம்முடைய தனித்தன்மையிழந்து, காணப்படுவதும் காண்பவனும் இரண்டற கலக்கும் அனுபவம் உண்மையான அனுபவம் .

 

ஒரு அழகிய மலை தொடரை பற்றி நாம் ஒரு கட்டுரையில் படிக்கின்றோம். அந்த இடம் பற்றியும், சூழல், அங்கு பார்க்கும் காட்சி, ஒலிகள், வாசனைகள், அங்கு தெரியும் செடிகள், மரங்கள், பூக்கள், அவற்றின் நிறங்கள் , வானில் தெரியும் மேக கூட்டங்களும் பறவைகளின் ஒருங்கிணைந்த பயணங்களென்று பலவற்றை மிக விரிவாக வர்ணனை செய்யும் கட்டுரை. இது அந்த காட்சியினை அந்த இடத்துக்கு செல்லாமலேயே நம்மால் அனுபவிக்க ஒரு கருவியாக இருக்கின்றது.மேலும் அந்த ஊரின் மற்ற சிறப்புகள், அதன் சரித்திரம், என்று பல செய்திகளும் சொல்லப்பட்டிருக்கும். ஐந்து புலன்களால் அனுபவிக்கவேண்டியதை வார்த்தைகளை கொண்டு நம் மனதினால் கற்பனைசெய்யப்பட்டு அடையும் மெய்நிகர் அனுபவமே( Virtual Reality ) இது.

 

நாம் பின்னர் அந்த இடத்திற்கே நேரில் செல்லும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொழுது , அந்த இடத்திலிருந்த படியே அந்த கட்டுரை நமது காதுகளில் ஒலித்தவண்ணம் இருக்க, அந்த இடத்தை அனுபவித்துக்கொண்டிருப்போம். இங்கே அறிதல் முந்திக்கொள்ளுமானால் அனுபவத்தினை இழந்துவிடுவோம். அந்த செய்திகளில் மனம் செல்லுமேயானால் அதை அந்த காட்சிகளில் தேடிக்கொண்டிருப்போம். இதனை ஒரு உண்மையான முழு அனுபவம் என்று நாம் சொல்ல முடியாது. நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்த வர்ணனனைகளை நாம் களையும் பொழுதே அந்த காட்சியினுள் பயணிக்க தொடங்குகின்றோம்.

 

இது போலவே ஒரு கலைப்படைப்பினை நாம் அணுகுகின்ற பொழுதும் நமக்கு பல பரிமாற்றங்கள் ஏற்படுகின்றது . முதலில் நமக்கு தோன்றும் சிந்தனை, "இது என்ன?" என்பதே! அங்கே ஒரு பொருளோ, ஒரு சிந்தனையோ, கருத்தோ, ஒரு உணர்வோ, நமக்கு ஏற்கனவே அறிமுகமான வடிவத்தில் உள்ளதா என்று நம் மனம் தேட தொடங்குகின்றது. பின்னர் அந்த கருத்தினை சார்ந்தே அந்த படைப்பினை மேலும் பார்க்கின்றோம். நம் மனம் அந்த கருத்தின் மீது கவனத்தை செலுத்தத்தொடங்கியவுடன் நம் புலன்கள் சக்தியிழந்து விடுகின்றது. ஒரு கலைப்படைப்பென்பது புலன்கள் சார்ந்த ஓன்று. புலன்களின் மூலமாகவே அனுபவிக்கவேண்டிய ஒன்று. சிந்தனைகளுக்கும் மனதிற்கும் எந்த வேலையும் இல்லை என்பது பொருளல்ல. ஆனால் அவற்றிற்கு முன்வரிசையில் இடமில்லை என்பதை நாம் உணரவேண்டும்.

 

இந்த உலகமே ஒரு ஒளி ஒலி காட்சிதான். ஓளி தான் இங்கே காட்சிக்கு காரணம், ஆனால் தொடர்ந்து வர்ணனைசெய்யும் ஒலியே இந்த காட்சிகளுக்கு பொருள் என்கின்ற கட்டுக்கதையினை நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இந்த கதைகளும் அதன் அர்த்தங்களும் நம்மை ஆக்கிரமித்துக்கொண்டு இந்த அழகிய உலகினை முழுமையாக அனுபவிக்கவிடாமல் தடைகளை ஏற்படுத்துகின்றது. இந்த அர்த்தங்களின் தேவையிலிருந்து நாம் விடுபடும் பொழுது மிக இயற்கையாக உண்மையாக வாழத்தொடங்கியிருப்போம்.

 

வான் கோவின் 'ரெட் வைன்யார்டஸ்' (Red Vineyards) 1888ஆம் ஆண்டு தீட்டப்பட்டது. இந்த இயற்கை காட்சியில் பல தனிமங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள காட்சியினை தாண்டி இதனை உற்றுநோக்கினால் அதில் அடர்த்தியான செழுமையான வண்ணக்கீற்றுக்களின் விருந்து நமக்கு புலப்படும். இது எந்த இடம், இதில் இருக்கும் மனிதர்கள் யார்?, எதற்காக தீட்டப்பட்டது, இதில் வான் கோ நமக்கு கூறவரும் கருத்து என்பதெல்லாம் நம் மனதினை ஆட்கொள்ளும்பொழுது இந்த வண்ணமிகு ஓவியத்தில் அதன் எண்ணற்ற தூரிகை கீற்றுக்களில் ரம்மியமானதொரு பயண அனுபவத்தினை நாம் தவறவிட்டிருப்போம்.

 

இந்த உலகமே ஒரு ஒளி ஒலி காட்சிதான். ஓளி தான் இங்கே காட்சிக்கு காரணம், ஆனால் தொடர்ந்து வர்ணனைசெய்யும் ஒலியே இந்த காட்சிகளுக்கு பொருள் என்கின்ற கட்டுக்கதையினை நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றது

 

இதைப்போலவே நாம் அறிதல், புரிதல் போன்ற தன்மைகளை புறந்தள்ளி ஒரு கலைப்படைப்பினை புலன்கள் சார்ந்ததொரு விருந்தாகவே உணர்ந்து அணுகவேண்டும், அதனை அனுபவிக்கவேண்டும்.

பி.கு. : வான் கோவின் இந்த ஓவியம் அவன் தன வாழ்நாளில் விற்ற ஒரே ஓவியமாக கருதப்படுகிறது.

 

இணைக்கப்பட்டுள்ள இந்த ஓவியத்தினை zoom செய்து பார்க்கவும், வான் கோவின் இழைநயம் நம்மை வியக்கவைக்கும்.

நாம் எந்த ஒரு கலைப்படைப்பினையும் அதன் பொருளில் சிக்கிக்கொள்ளாமல் மிக இயல்பாக எவ்வாறு அணுகுவது என்பது குறித்த பார்வையே இது. சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ப்ரெஞ்சு குகைஓவியத்தையும் இவ்வாறே அணுகலாம்.

 

 

 

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர்காலத்து உலோக சிற்பத்தையும் அவ்வாறே அனுபவிக்கலாம். கீற்றுக்கள், அதன் தன்மைகள், நளினங்கள் இழைநயமென்று ஒரு கலைஞன் நம்மை இட்டுச்செல்லும் இனிய பயணமாகவே அனுபவிக்கலாம். வான் கோவின் ஓவியம் இங்கே மற்றுமொரு உதாரணமாகவே கொள்ளவேண்டும்.

 

Share on Facebook
Share on Twitter
Please reload

Featured Posts

மனதின் பருவகாலங்கள்

July 12, 2017

1/1
Please reload

Recent Posts

February 1, 2019

April 13, 2018

March 29, 2018

Please reload

Search By Tags
Please reload

Follow Me
  • Facebook Classic
  • Instagram - Black Circle
Instagram

© 2020 by Ganapathy Subramaniam