கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும் மூன்று காலங்களையும், அதில் தோன்றும் வெளியினையும் அதில் நிகழும் நிகழ்வுகளுக்குமெல்லாம் சேர்த்து நாம் கொடுக்கும் பெயரே பிரபஞ்சம். ஒரு மிக மெல்லிய பரப்பினைகொண்ட மலரின் இதழை இந்த பிரபஞ்சம் படைக்கின்றது, ஒரு மாபெரும் நீர்விழ்ச்சியையும் இது படைக்கின்றது, சூரியனைபோன்று 50,000 மடங்கு பெரியதொரு நட்சத்திரத்தையும் அது படைத்துவிடுகின்றது.
இந்த எண்ணிலடங்காத பல்வேறுவிதமான வடிவங்கள் நமக்கு ஆச்சரியங்களையும், கிளர்ச்சியையும் தருவதற்காகவே தோன்றுகின்றன. இந்த வடிவங்களிலெல்லாம் நம் புலன்களையும் மனதினையும் கொண்டு பயணிக்கையில் நமக்கு ஏற்படும் அனுபவமென்பது , அந்த வடிவமெனும் அனுபவமே.
ஒரு ஆலங்கட்டி மழை, ஒரு சூரிய உதயம், ஒரு ஊதா நிற மலர், மழை ஏற்படுத்தும் மண் வாசனை, என்பது போன்று வடிவங்களும், அதில் நுணுக்கங்களும் நமக்கு பழைய மற்றும் புதிய அனுபவங்களை தருகின்றது. சில வேளைகளில் அந்த நிகழ்வுகளின் புதுமையான வரிசை பழைய வடிவங்களைகொண்டிருந்தாலும் புதிதாகவே தோன்றுகிறது.
இந்த பிரபஞ்சம் ஒரு படைப்பாளி. அதன் அங்கங்களாக பல படைப்பாளிகள் அதனுள் இயங்குகிறார்கள். ஒரு மலர்ச்செடி, ஒரு நீரூற்று, ஒரு மேகம், ஒரு சிலந்தி, என்று பலரின் செயல்பாடுகளிலேயே இந்த பிரபஞ்சம் படைத்துக்கொண்டிருக்கின்றது. இதில் மனிதர்களும் அவர்களின் மனமும் பெரும்பங்கு வகிக்கின்றன.
யானையின் துதிக்கயினையும், அன்னப்பறவையின் கழுத்தினையும், படமெடுக்கும் பாம்பினையும் படைத்தது பிரபஞ்சம். அந்த
யானை துதிக்கையினை போலவே அன்னப்பரவையின் கழுத்தையும் , உயரப்படமெடுக்கும் பாம்பினையும் இப்பிரபஞ்சம் படைதிருப்பதாக கருதுவது மனித மனம்.
ஒன்று பிரபஞ்சத்தின் படைப்பு , மற்றொன்று மனதின் படைப்பு.
இந்த பிரபஞ்சம் ஏற்கனவே படைத்துவிட்ட மனித உருவங்களையும், பூனைக்குட்டிகளையும், மென்மையான மலரின் இதழ்களையும் மனிதன் மீண்டும் படைப்பதென்பது, ஒரு படைப்பு பட்டறையில் பாடம் கற்றுகொள்ளும் செயல் மட்டுமே. அவன் தனக்கேயானதொரு படைப்பினை ஒருநாள் படைத்துவிடுவதற்கு தன்னை தானே தயார் செய்துகொள்ளும் முயற்சியில் இந்த பிரபஞ்சத்தினை தன்னுடைய ஆசிரியனாக கொள்ளும் பாவனையே இந்த பயிற்சிக்கான செயல்பாடுகள்.
இதில் முதலில் ஒரு கலைஞன் செய்வது, தன் ஆசிரியரான இந்த பிரபஞ்சத்தின் படைப்புகளையெல்லாம் ஆழ்ந்து அறிந்துகொள்வதே, வடிவங்கள், அதன் வண்ணங்கள், ஒளி ஏற்படுத்தும் எண்ணற்ற மாற்றங்கள், வடிவங்களின் பரப்பின் தன்மைகள் என பல அம்சங்களை பல ஆண்டுகள் இந்த உலகின் பல்வேறு வடிவங்களில் கண்டு அதனை உள்ளது உள்ளவரே தன் கித்தானுக்குள் கொண்டுவருகிறான். எத்தனை பெரிய , நுணுக்கமான, தத்ரூபமான ஓவியமாக இருந்தாலும் அது ஒரு பயிற்சியே.
இதனை ஒரு இறுதி இலக்காக கொள்வதென்பது ஒரு பட்டப்படிப்பினை பட்டதிற்காகவே படிப்பது போன்றது. சில நேரங்களில் உலகமும் அவ்வாறே நினைத்துவிடுகின்றது. அதிக மதிப்பெண்களை பெரும் மாணவர்களை ஆரவாரத்துடன் பாராட்டி ஊக்குவிப்பது போலவே இதனையும் மிகவும் புகழ்ந்து பாராட்டி இதுவே கலைஞர்கள் அடையவேண்டிய இலக்கு போல பெரும்பாலோர் கருதிவிடுகிறார்கள்.
ஒரு முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவனோ, அல்லது முனைவர் பட்டம் பெற்றுவிட்ட ஒரு ஆய்வாளரோ, தம் இலக்கை அடைந்துவிட்டதற்க்காக பாராட்டப்படுவதில்லை, உண்மையில் அவர்கள் சரியான இலக்குகளை தேடுவதற்கும், அவற்றையெல்லாம் அடைவதற்கும் தயாரகிவிட்டார்கள் என்பதற்கே இந்த பாராட்டுகள்.
ஒரு கலைஞனுக்கு இந்த பிரபஞ்சம் ஒரு ஆசிரியன், அந்த ஆசிரியரிடம் சில காலங்கள் பயின்றுவிட்டு தானாக இயங்கும் திறன் பெற்றபின்னர், பல அதிசய வடிவங்களை படைக்கும் பயணத்தில் இயங்குகிறான். மாறாக பல ஓவியர்கள், இந்த பிரபஞ்சம் அளிக்கும் வடிவங்களை அச்சு அசலாக வடித்தெடுக்க முடியும் என்று அதனை சவாலாக கொண்டு இந்த பிரபஞ்சத்தினை தன்னுடைய போட்டியாளர் போல எதிர்கொள்கிறார்கள்.
பிக்காசோவின் குவர்னிகா போன்றதொரு படைப்பினை ஓவியர்கள் பயிற்சிக்காக நகலெடுக்கலாம், அது பல பாடங்களை நமக்கு அளிக்கும், சோழர்கால சிற்பிகளின் நளினமிகு வெண்கலசிற்பங்களை போலவே நாமும் வடித்தெடுக்கலாம், அது மிக உயர்ந்த பயிற்சியாக இருக்கும், நம்முடைய சமகால படைப்பாளிகளில் நம்மை மிகவும் ஈர்த்த ஓவியரின் படைப்பையும் கூட மீண்டும் மீண்டும் நகலெடுக்கலாம், அவரைவிட சிறப்பாகக்கூட படைத்துவிடலாம், அதுவும் ஒரு பயிற்சியே. ஆனால் இவையெதுவுமே நம் படைப்பாகிவிடாது.
இதுபோலவே இந்த பிரபஞ்சத்தின் படைப்புகளையும் அணுகி அவற்றை கவனித்து உள்வாங்கி நுணுக்கமாக நகலெடுக்கலாம். ஆனால் அவற்றை படைப்புகள் என்று சொல்லிவிடமுடியாது. நம்முடைய ஐம்புலன்களையும் கிளர்ச்சியுரக்கூடிய ஒரு செடியின் படைப்பாகிய மலரை நாம் கித்தானில் வெறும் கண்களால் மட்டுமே உணரக்கூடிய ஒரு உருவமாகக்கொண்டுவருவது நம்முடைய படைப்பாகிவிடுமா என்பது சிந்திக்கபடவேண்டியது, அந்தச்செடி நம்முடைய சக படைப்பாளியெனும் கோணத்தில் பார்க்கும்பொழுது நம்முடைய முயற்சி வெறும் நகலென்று விளங்கிவிடும்.
இந்த உலகம் இரண்டு வித நிஜங்களை கொண்டது. அனைவருக்கும் பொதுவாக காட்சியளிக்கும் நிஜம் (Objective Reality), என்றும் தனிப்பட்ட ஒருவருக்கு தோன்றும் நிஜம்(Subjective Reality) என்றும் இரண்டு நிஜங்களை கொண்டது இந்த உலகம். நாம் அனைவரும் காணும் நிலவு பொது நிஜம், ஒருவனின் கனவினில் மட்டுமே தோன்றிய குதிரைக்கொம்பு தனிநிஜம். பொது நிஜம் அனைவருக்கும் புலப்பட்டுவிடுகின்றது, தனிநிஜமோ அது தோன்றிய நபருக்கு மட்டுமே புலப்படும், பிறருக்கு அது ஒரு பொய்.
கிரியேடிவ் என்று நாம் கூறும் பொழுது இந்த நகலெடுத்தலின் பிடியிலிருந்து விடுபட்ட நிலையினையே நாம் குறிப்பிடுகின்றோம். மெய்மை சார்ந்தோ, அல்லது மெய் சாராமலோ படைக்கப்படும் இவை அந்த படைப்பாளியின் தனித்த உருவாக்கம்.
இந்த தனித்த படைப்பினுக்குள் ஒரு கலைஞன் நுழைவதற்கான கதவு அவனுடைய தனிநிஜங்களை உணரும் நுண்ணுணர்வே. இந்த உலகம் அளிக்கும் பொதுவான பார்வையிலிருந்து தன்னுடைய தனிப்பட்ட பார்வையினை அடைந்து உணரும் பொழுதே இந்த படைப்பு சாத்தியப்படுகின்றது.
இங்கே நாம் காண்பது 1932ஆம் ஆண்டு பாப்லோ பிக்காசோ தீட்டிய 'நிர்வாண பெண், பச்சை இலைகளும் உருவ சிலையும்' (Nude, Green Leaves and Bust) எனும் ஐந்தடி உயர தைலவண்ண ஓவியம். இதிலுள்ள வடிவங்கள் நமக்கு பரிச்சயமான உருவங்களாக இருந்த போதும் அது பிக்காசோவின் தனிப்பட்ட பார்வையில் கண்டெடுக்கபட்டவை. 2010ஆம் ஆண்டு நியூ யார்க்கில் நடந்த ஏலத்தில் சுமார் 700 கோடி ருபாய்களுக்கு அது கைமாறியது.