top of page

எண்ணற்ற கணங்களில் ஒரு கணம்ஒரு வெற்று கித்தானில் சிறிய வண்ணத்திட்டை ஒரு தூரிகையினால் வைக்கும் கணம் அந்த ஓவியத்தின் முதல் கணம். அதற்குமேல் அதில் இடப்படும் ஒவ்வொரு கீற்றும், புள்ளியும், வடிவமும், வண்ண தெளிப்பும், நீண்ட நெடும் கீற்றும், அந்த ஓவியத்தின் அடுத்தடுத்த கணங்கள். ஒரு பெரிய வண்ணப்பூச்சு, இருக்கும் வண்ணங்களின் மேலே திரும்ப ஒரு கீற்று, ஈரமான வண்ண திட்டிலிருந்து ஒரு பகுதியினை சுரண்டி எடுத்தல், இது போல ஒவ்வொரு செயலும் ஒரு கணம்.


இந்த செயல்முறைகள் தொடர்ந்து அந்த ஓவியத்தினை மாற்றியவண்ணமிருக்க அது ஒரு சமயம் திடீரென முற்றுபெற்றுவிட்டதாக ஓவியனால் அறிவிக்கபடுகின்றது. அந்த முடிவுற்ற ஓவியம், அந்த ஓவியத்தின் பல்லாயிரக்கணக்கான கணங்களில் ஒரு குறிப்பிட்ட கணம் மட்டுமே. அதன் தனிச்சிறப்பு என்ன என்றால் அந்த ஒரு கணம் மட்டுமே பார்வையாளனுக்கு கிட்டுகிறது.


ஒரு ஓவியத்தின் கதை, அதனுடைய மூலபொருட்களின் தயாரிப்பில் தொடங்கி, ஓவியனின் மனதில் ஏற்படும் எண்ணங்கள், உணர்வுகள், உத்வேகங்கள் வழியாக தொடர்ந்து, அவன் ஏற்படுத்தும் குறிகளின் வாயிலாக வளர்ந்து ஒரு சமயம் முற்றுபெற்றுவிடுகின்றது.


ஒரு ஓவியனின் செயல்பாடு அந்த ஒரு குறிப்பிட்ட நிலையினை நோக்கி திட்டமிட்ட பயணமாக இருக்கலாம், அப்பொழுது அந்த இறுதிக்கணம் மிக முக்கியத்துவம் வாய்ந்துவிடுகின்றது. பெரும்பாலான படைப்புகள் இவ்வாறு இறுதிக்கணத்தினை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிப்பவை அல்ல. அந்த இறுதிக்கணம் என்பது அந்த ஓவியனுக்குமே கூட அந்த கணப்பொழுதில் தான் தெரிகின்றது.


நாம் ஏன் இதுபற்றி சிந்திக்கவேண்டும்? ஒரு ஓவியம் என்பது ஒரு பொருள், அனைத்து பொருட்களை போல அதன் இறுதி வடிவமே நமக்கு முக்கியமானது, அதன் உருவாக்கம் பற்றி நாம் அறியவேண்டியது இல்லை என்று நாம் எண்ணலாம்.


உதாரணத்திற்கு ஒரு கைபேசியினை நாம் வாங்கும் பொழுது அதன் இறுதி வடிவத்தினையே வாங்குகின்றோம், அதன் மூலப்பொருட்கள் என்ன, அது உருவாகும் செயல்பாடு என்ன, என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியது இல்லை. அதனை நாம் அந்த வடிவத்திலேயே உபயோகிக்க தொடங்கிவிடுகின்றோம். இது போன்ற பிற பொருட்களனைதிற்கும் இது பொதுவாக பொருந்தும், ஆனால் ஒரு கலைப்படைப்பென்பது இறுதி கணத்தில் மட்டுமே இருப்பதல்ல.


ஒரு ஓவியனின் ஓவியத்தினை அந்த ஒரு குறிப்பிட்ட ஓவியத்தின் மூலம் அனுபவித்துவிட முடியாது, ஒரு ஓவியம் என்பது ஒரு பெரிய புத்தகத்தின் ஒரு பக்கம் போன்றது. ஒரு பெரிய நாவலை ஒரே ஒரு பக்கத்தினை படித்து ரசித்து முழுமையாக உணர்ந்து விடமுடியாது, அது போலவே அந்த ஓவியனின் அனைத்து படைப்புகளையும் நாம் காணும் பொழுதே அந்த ஒரு ஓவியத்தின் ஆனுபவம் நமக்கு முழுமையாக கிட்டும்.


ஒரு புதிய படைப்பென்பது ஒரு தனிப்பட்ட இதற்கு முன் பயணிக்கபடாத புதிய பயணம் விட்டு செல்லும் தடம் போன்றது. அந்த பயணத்தின் வெவேறு கணங்களின் ஒட்டுமொத்த தடம். ஒரு புகைப்பட கருவியில், படச்சுருளை முன்னால் நகர்த்தாமல், மீண்டும் மீண்டும் ஒரு சட்டத்திலேயே பல ஆயிரம் படங்களை எடுத்தொமேயானால் அதன் இறுதி நிலை எவ்வாறு இருக்குமோ அதுபோன்றது ஒரு ஓவியம். ஒவ்வொரு படமும் அங்கே முக்கியத்துவம் வாய்ந்தது, எந்த ஒரு கணம் அந்த படத்திற்கு குறிப்பிட்ட வடிவத்தினை அளிக்கின்றதென்று நம்மால் தீர்மானிக்க முடியாது.


பல ஆயிரம் கீற்றுகள் கொண்ட ஒரு ஓவியம் , சில நூறு கீற்றுகள் முன்னரே முற்றுபெற்றதாக ஒருவருக்கு தோன்றலாம், சிலருக்கு அதை தாண்டிய பல நூறுகீற்றுகளையும் தாண்டி முடிவுபெற்ற ஓவியம் என்று அறிவிக்கப்பட்ட பொழுதும் ஏதோ ஒன்று குறைப்பாடாக இருப்பதாக உணரலாம். இது அந்த படைப்பினை உருவாக்கிய ஓவியனுக்கும், அதனை பார்வையிடும் பார்வையாளனுக்கும் இடையே கூட முரண்களை தந்துவிடக்கூடியது.


ஒரு ஓவியம் என்பது ஒரு செயல்பாட்டின் பதிவு, அது மிக நெடிய இயக்கத்தின் ஒட்டுமொத்த அனுபவம். அதனை கணம் கணமாக முற்றிலும் அனுபவித்த ஓவியன், அதன் இறுதிக்கணத்தை மட்டுமே பார்வையாளனுடன் பகிர்ந்து கொள்கிறான்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த சுவித்சர்லாந்து நாட்டை சேர்ந்த கலை சரித்திரவியலாளர் ஹைன்ரிக் வுல்ப்லின்(Heinrich Wölfflin) தன்னுடைய 'கலை சரித்திர கோட்பாடுகள்' (Principles of Art History) எனும் நூலில், பதினாறாம் நூற்றடிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு படைப்பாளிகளிடம் ஏற்பட்ட பரிணாமத்தினை பகுத்தறிய ஐந்து கருத்துக்களை முன்வைக்கின்றார். பாத்திசெல்லி(Botticelli), மிகெலாஞ்செலோ(Michelangelo), ஆங்க(Ingres) போன்ற ஓவியர்களிடமிருந்து வான் கோ(Van Gogh), ரெம்ப்ரான்த்(Rembrandt), ரெனுவா(Renoir) போன்ற ஓவியர்களுக்கான பரிணாமத்தின் பயணமாகவும் அதனை கொள்ளலாம்.


அதில் முதலாவதாக அவர் கூறும் கருத்து, ஓவியர்கள் கீற்றுதலிலிருந்து தீட்டுதலுக்கு(Linear to painterly) பரிணமிக்கிறார்கள் என்பதே. இவர் கூறும் இந்த 'பெயிண்டர்லி' எனும் தன்மை நாம் மேலே கூறிய கணங்களின் தடத்திற்கு தொடர்புடையது.


தூரிகை ஏற்படுத்தும் சற்று முரட்டுத்தனமான தடங்களை உள்ளது உள்ளவாறே விட்டுவிடுவதும், அதீத ஜாக்கிரதையினை கைவிட்டு ஒரு தன்னிச்சையான செயல்பாடும் இதன் தன்மைகள். இவ்வாறு இயங்கும் பொழுது அந்த ஓவியன் செயல்பட்ட அத்தனை கணங்களும் அதன் அனுபவங்களும் கித்தானில் பாதுகாக்கப்பட்டு பார்வையாளனின் முன்னால் வைக்கப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் படைப்புகள் தரும் அனுபவத்தில் முழுமையாக தன்னை மூழ்கடித்துக்கொள்கிறான் அந்த பார்வையாளன்.

வுல்ப்லின் தன்னுடைய நூலில் கூறிய மற்ற நான்கு கருத்துக்கள் Plane to Recession, Closed to Open form, Multiplicity to Unity மற்றும் Absolute clarity to Relative clarity என்பன. இவற்றை பற்றி விரிவாக மற்றொரு சமயம் அசைபோடலாம்.


இங்கே நாம் காண்பது 1898ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓவியர் ஹன்ரி மெத்தீஸ் (Henri Matisse) தீட்டிய 'ஜாடியில் சூரியகாந்தி மலர்கள்' (Vase of Sunflowers) எனும் தைலவண்ண ஓவியம். இந்த ஓவியத்தினை நாம் காணும் பொழுது அந்த மலர்களின் வண்ணமும், அந்த ஜாடியின் ஒளியும், இலைகள் மலரின் வடிவத்தினை பிரித்து காட்டுதலும் , அடர்த்தியான ஒரு காற்றுசூழலும் நமக்கு புலப்படும் அதே சமயம் அந்த ஓவியத்தின் துவக்கத்திலிருந்தே மெத்தீஸ் உருவாக்கிய தீட்டல்கள் நமக்கு தெரிவதுபோல அமைந்து அந்த ஓவியம் உருவான ஒவ்வொரு கணமும் நம்முன் காட்சிப்படுத்தப்பட்டு ஒரு முழு அனுபவத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.

bottom of page