top of page

கனவு, வீடியோ கேம், திரைப்படம், உலகம்!




இந்த பிரபஞ்சம் ஒரு மிகப்பெரிய கணினி என்று நொபெல் பரிசு பெற்ற பிரபல இயற்பியல் வல்லுநர் ரிச்சர்ட் பெய்ன்மன் (Richard Feynman) ஒரு வியப்பூட்டும் எண்ணத்தினை முன்வைத்தார்.


கணினி என்பது, ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு ஓயாமல் மாறிக்கொண்டிருக்கும் ஒரு எளிய கருவி என்பதை மனதில் கொண்டே அவர் இவாறு சிந்தித்தார். நாம் காணும் மிகசக்தி வாய்ந்த கணினியும் அடிப்படையில் ஒரு மிக எளிய சாதனமே. ஒரு ஆரம்ப நிலை, சில முடிவு நிலைகள், மற்றும் பல இடைப்பட்ட நிலைகளை கொண்டது தான் கணினி. ஒரு நிலையிலிருந்து, வேறொரு நிலைக்கு சில விதி முறைகளின்படி அது ஓயாமல் மாறிக்கொண்டிருக்கும். சில நேரம், அவை முடிவற்ற மாற்றத்தில் இருப்பதை போன்று தோன்றும், மேலும் அவை எந்த விதிமுறைக்கும் கட்டுபடாமல், தாறுமாறாக நிலை மாறுகின்றதோ என்ற தோற்றம் கூட ஏற்படும், ஆயினும், அலன் ட்யுரிங்க் (Alan Turing) என்னும் மற்றுமொரு கணினி மேதையின் கூற்றுப்படி அனைத்து கணினிகளும் ஒரு முடிவுநிலக்கு இருதியில் வந்து சேரும்.


நாம் அனுபவிக்கும் இந்த உலகம் ஒரு கணினி போன்றதென்று நாம் எதார்தத்திலும் உணருகின்றோம். வாழ்வில், பல நிகழ்வுகள் ஏற்படுகின்றன, பல தொடர்புகள், பல இணைப்புக்கள், சில நேரங்களில் வெறுமை என்று , தொடர் மாற்றங்கள் நம்மை சந்திக்கின்றன. சிலவற்றின் உட்பொருளை நாம் காண முற்படுகின்றோம், சில அர்த்தங்கள், பல அர்த்தமற்றவைகள் என நாம் காணுகின்றோம். எனினும் இந்த பிரபஞ்சம் நம் எண்ணங்களையும் விளக்கங்களையும் பொருட்படுத்துவதாய் தெரிவதில்லை. நாம் பலவற்றை வகைப்படுதுகின்றோம், இது சிறிது என்றும் அது பெரிது என்றும், இது சிகப்பு அது நீலமென்றும் பெயர் சூடுகின்றோம். ஒரு மிக சிக்கலான நிகழ்வுத்தொடரினை மனதில் எண்ணி, அது நமது விருப்பமென்கிறோம். திட்டமிடுகின்றோம் கூடி செயலாற்றுகின்றோம், விரும்புகின்றோம், வெறுக்கிறோம், இறுதியில் ஒரு நாள் இந்த உலகிற்கு விடைகொடுக்கின்றோம். மீண்டும் எல்லாம் தொடங்குகின்றது.


மேற்கண்ட செய்தி ஒரு கனவினை வர்ணிப்பதாகக்கூட நாம் கொள்ளலாம், ஒரு வெர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டாகவும் இருக்கலாம், ஒரு திரைப்படம் கூட இந்த விளக்கத்துக்குள் அடங்கும், நாம் நிஜமென நினைக்கும் வாழ்வையும் இது வர்ணிக்கலாம். நாம் இந்த நிகழ்வுகளின் மத்தியில் மூழ்கி இருக்கும் நேரம், நம் அனுபவம், இவற்றுள் எது என்று தீர்மானிப்பது அரிது. ஒரு பார்முலா-1 கணினி விளையாட்டு போட்டியில், அற்புதமான ஒரு தளத்தில், நாம் அதிவேகமாக பறந்து கொண்டிருக்கும் சமயம் யாரேனும் , நம்மை தொந்தரவு செய்தால் நாம் திடுக்கிடுகிறோம், மேலும் கோபம் கூட கொள்கிறோம். இது வெறும் விளையாட்டுதானே என்று நண்பர் கூறினாலும், நம் எளிதில் விடுபடுவதில்லை.


பெரும்பாலான நமக்கு சில திரைப்படகளில் மனதின் கவனம் முற்றினையும் தோயவித்த அனுபவம் உண்டு. திரைப்படங்கள் பலவாராக அதிரடி, கலை, காதல், சண்டை , நகைச்சுவை, மர்மம், மசாலா, திகில் போன்று நம்முடைய சுவைக்கேற்ப எடுக்கபடுகின்றன. நாம் ஒரு படத்தினை காணும் பொழுது பெரும்பாலும் ஒரு கதாபாத்திரமாக நம்மை பாவித்துகொண்டே அதனை அணுகுகின்றோம். பெரும்பாலும் ஒரு உண்மை நிகழுவு போலவே ஒரு திரைப்படத்தினை நாம் அனுபவகின்றோம். சிறந்த இயக்குனர்கள், படத்தினை பார்வையாளர்கள் பங்குபெறும் விதம் வடிவமைத்திருப்பர்கள். கதையினை சித்தரிக்கும் விதத்தில் சினிமா பார்க்கும் நம் உள்மனதிற்கு வேலை கொடுப்பார்கள். இது நம்மை அந்த அனுபவத்தில் மேலும் தீவிரமாக ஈடுபட்டு ஒரு முழு அனுபவத்தை அடைய செய்கின்றது. நாம் அந்த கதாபாத்திரங்களுடன் சிரித்து , அழுது, சந்தோஷித்து, துக்கமுற்று, அவர்களில் ஒருவராக வாழ்வது போன்ற பிரமை ஏற்படுகிறது. திரைப்படம் முடிவுறும் நேரம் நாம் ஒரு உலகத்தில் இருந்து வேறொரு உலகதிற்கு திரும்புவது போன்ற எண்ணம் உருவாகின்றது.


நாம் அனைவரும் கனவுகள் காண்கின்றோம். சிலர் பகலிலும், பலர் இரவுகளிலும் என கனவு உலகில் உலவாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கனவு என்பது ஒரு விசித்திரமான அனுபவம். எல்லைகளும் வரம்புகளும் அற்ற ஒரு வினோதமான உலகிற்கு நம்மை அழதுசெல்லும் ஒரு அரும் சாதனமே நாம் தினம் தோறும் காணும் கனவு. ஒரு பரம ஏழை சக்ரவர்த்தியாக வாழலாம், ஒரு மன்னன் குடியானவனாகலம், நொடிப்பொழுதில் பல்லாயிரம் மைல்கள் தாண்டலாம், பல நூறு ஆண்டுகள் கூட கடக்க முடியும். காண்கின்ற வரை அது 100 சதவிகிதம் நிஜமான அனுபவமே. வயிற்று வலியுடன் நாம் உறங்க சென்றாலும், உறங்கியவுடன், அந்த வலியிலிருந்து விடுதலை கிடைக்கின்றது. நாம் தினம் அனுபவிக்கும் 'நிஜ' வாழ்கையிலிருந்து துண்டிக்கபடுகின்றோம். வேறு ஒரு உலகில் நுழைந்து மாறுபட்ட அனுபவத்தினை அடைகின்றோம். நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், நம்முடைய கனவினில், அது ஒரு கனவு என்கிற எண்ணம் தோன்றுவதில்லை. அவ்வாறு தோன்றினாலும், அது ஒரு கனவு என்று கனுவுக்குல்ள்ளிருந்து நம்மால் நிரூபிக்க முடிவதில்லை.


இயற்கை என்னும் அற்புதத்தின் வெர்சுவல் ரியாலிட்டி, அல்லது திரைப்படம் தான் கனவு என்பது. இயற்கையின் இந்த வினோத கருவி, நாம் அனுபவிக்கும் இந்த உலக வாழ்வும் ஒரு நிஜமற்ற கனவே என்பதை நமக்கு சூசகமாக தெரியபடுத்ததான் இருக்கின்றது, இதுவே கனவின் முக்கிய நோக்கம். நாம் தினம் தோறும் கனவு காண்பதன் காரணமே, இதனைபற்றி நாம் சிந்திக்கவேண்டும் என்பதும், இந்த உலகம் பற்றிய விளக்கத்தை ஆராயவேண்டும் என்பதே.


தீவிர ஆராய்ச்சியின் பின் நாம் இவ்வுலகின் உண்மை தன்மையினை அறிந்துகொண்டபின், கனவுலகினைபோல் இந்த உலகமும் ஒரு எல்லைகளற்ற உல்லாச உலகமாக தோன்றும்.

57 views0 comments
bottom of page