நாம் வாழும் இந்த வாழ்வு ஒரு அனுபவத்தொடர் என்று சொல்லலாம். பலவித அனுபவங்களின் சங்கமம், பல நிகழ்விகளின் தொகுப்பு என்றெல்லாம் நாம் நமது வாழ்கையினை வர்ணிக்க முடியும். இந்த அனுபவங்களின் மத்தியில் நின்றுக்கொண்டு மிகமுக்கிய பங்கினை ஆற்றும் கருவி நம்முடைய மனம். நம் மனதில் ஏற்படும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மூலம் தான் நாம் நம் அனுபவங்களை உணர்கின்றோம். வாழ்கையினை அறிந்துகொள்ளவும் ஓரளவுக்கு அதனை நம்முடைய கட்டுக்குள் கொண்டுவரவும் , நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது நம்முடைய மனம் பற்றித்தான்.
மனம் என்றால் என்ன என்று ஆராய்ந்தோமென்றால், அது நம்முடைய உடலிலிருந்து வேறுபட்டதென்று புலப்படும். உடலின் மிக முக்கியமான உறுப்பாகிய மூளையின் ஒரு செயல்கூறுதான் மனம் என்று நாம் எண்ணக்கூடும் அறிவியல் கூட அக்கருத்தினை ஒப்புக்கொள்ளக கூடும். ஆனால் மூளை என்பது உடலின் ஒரு உறுப்பு மாத்திரமே. கணினியினை போன்று செயலாற்றும் திறன் மட்டுமே மூளைக்கு உண்டு.
3-D அனிமேஷன் சம்பந்தப்பட்ட எதிர்விகித இயக்கவியல் (Inverse Kinematics) போன்றே நமது மூளையும் ஒரு கணிப்பொறி மென்பொருள் போல செயல் படுகின்றது. ஒரு 3D கதாபாத்திரம் செயலாற்றுவதற்கு என்னென்ன அசைவுகள் தேவையென்று அறிந்து அந்த சித்திரத்தை அசயச்செய்யும் மென் பொருள் போன்றே நமது மூளையும் நம்முடைய உடலின் இயக்கத்திற்கு என்னென்ன அசைவுகள் தேவையென்றறிந்து அதனை ஆட்டுவிக்கின்றது.
மூளையிலேதான் சிந்தனையும், உணர்வுகளும் தோன்றுவதுபோலக்கூட நாம் எண்ணலாம். மூளையின் நரம்புமண்டலதிலுள்ள நரம்பணுக்களின் களியாட்டமே சிந்தனைகளென்று நாம் நம்பக்கூடும். விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் காரணமாக ஒரு நாள், நாம் நம்முடைய ஒரு குறிப்பிட்ட சிந்தனைக்கோ, அல்லது உணர்வுக்கோ, ஒரு குறிப்பிட்ட நரம்பணுவின் செயலே காரணம் என்று துல்லியமாக கண்டறியக்கூடும். இவ்வாறெல்லாம் நாம் ஆரய்ந்தோமென்றால், மூளைதான் நம் மனதிற்கு ஆதார மென்று ஒரு முடிவுக்கு வந்துவிடுவோமோ? இல்லை!
கணிணியியல் விஞ்ஞானிகள் கூறும் ட்யுரிங்க் கணிப்பொறி (Turing machine), போன்றதொரு கருவிக்கும், மனதுக்கும் உள்ள வேறுபாடு, மனதில் வரும் எண்ணங்களினை உணரும் ஒரு நபர் மனதிற்கு உள்ளார் என்பதே, கணிப்பொறிக்கு உணரும் தன்மை கிடையாது.
அந்த எண்ணங்களை உணரும் நபர் தான் ‘நான்’. ஆக , நான் என்னும் அந்த ஒரு உணர்வு உடலுக்கும், மனதிற்கும் அப்பாற்பட்டதென்று தெரிந்தபின், நம் மனதில் ஏற்படும் எண்ணங்களும், உணர்வுகளும், நமக்கு ஏற்படுபவை அல்ல என்ற தெளிவு பிறக்கும். நான் என் மனதின் பார்வயாளனென்ற சரியான நோக்கத்துடன் வாழ்வினை எதிர்நோக்கலாம்.
இந்த மனப்பான்மையால் மாத்திரமே உலகம் உல்லாசமயமாகிவிடாதென்பது உண்மையே. காரணம், மனம் என்பது இந்த பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே. இந்த பிரபஞ்சத்தின் எந்த ஒரு அணுவினையும் கூட யாரொருவராலும் கட்டுபடுத்தமுடியாதென்பது இந்த படைப்பின் ரகசியம். ஆகையினால் மனதினை ஒரு குறிப்பிட்ட நிலையிலே வைத்திருப்பது சாத்தியமற்றது.
நாம் படிக்கும் புத்தகங்களின் மூலமாகவும், நாம் எதிர்நோக்கும் நிகழுவுகளாலும், நாம் உண்ணும் உணவினாலும், உடல் பயிற்ச்சியினாலும், சுவாவசப்பயிற்ச்சியினாலும் நம் மனதினை கட்டுபடுத்துவது போன்று தோன்றினாலும், நம் மனம் முழுகட்டுபாட்டிற்கு வராததற்கு காரணம் படைப்பின் ரகசியமே.
நம் மனதின் மாறுதல்கள் வேறுபடும் பருவகாலங்களை போன்றது. இளவேனில், முதுவேனில், கார், குளிர், முன்பனி, மற்றும் பின்பனி என்று மாறிவரும் பருவங்கள், எப்படி நமக்கு வேறுபட்ட அனுபவங்களை தருகின்றதோ, அதுபோலவே மாறுகின்ற மனம் பலவகயான எண்ணங்களினாலும், உணர்சிகளினாலும் நமக்கு வேடிக்கையையும், போழுதுபோக்கினையும் தருகின்றது, இதுவே படைப்பின் ரகசியம் .
இந்த உண்மையினை முற்றிலும் உணர்தபின்னர், இது ஒரு உல்லாச உலகமாக காட்சியளிக்கும்.