'அகடெமிக்' எனும் இடையூறு

(Painting : Hamsa and Damayanthi By Ravi Varma 1899)


 

 
சுமார் 25லிருந்து 30ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்ட ஓவிய மரபு 400-500 ஆண்டுகளுக்கு முன்னர் தலையெடுத்த மறுமலற்சியெனும் பரிணாமத்தினால் ஒரு முக்கிய மாற்றத்தினை கண்டது. மேற்கில் ஏற்பட்ட இந்த மாற்றம் பண்டையகால தொடர்ச்சியாக பயணித்துவரும் கிழக்கினை எதிர்கொண்ட விதம் ஒரு இடையூராகவே நிகழ்ந்தது.


 

 
மூக்கினை நேரிடையாகவே கையினால் தொட்டுவிட தெரிந்திருந்த கிழக்கு நாடுகளை சார்ந்த ஓவியர்களுக்கு , தலையை சுற்றி மூக்கை தொடும் வித்தையை கற்றுகொடுக்க மேற்கத்தியர் எடுத்த முயற்சியே அகடெமிக் அணுகுமுறை(Academic Approach).

கிழக்கு ஓவியர்களின் அணுகுமுறைகளில் பல குறைகள் இருப்பதாக கருதி அவற்றையெல்லாம் சரிசெய்யும் நோக்கத்துடன் காலனீய ஆங்கிலேயர்கள் ஓவிய கல்லூரிகளை இந்திய நாட்டில் பல இடங்களில் நிறுவினார்கள்.

அதன் பயிற்சிமுறையில் பல இந்திய ஓவியர்கள் தேர்ச்சிபெற்றவர்களானார்கள். அதில் குறிப்பிடத்தக்க ஓவியர் ராஜா ரவி வர்மா. அகடெமிக் பாணியில் இந்திய கருத்துகளையும் , கதாபாத்திரங்களையும் மிக தத்துரூபமாக பல ஓவியங்கள் தீட்டுகிறார். இந்திய புராணங்களை காணகிடைத்த மேற்கிலும், புதிய காட்சிபடுத்தலில் தமக்கு பரிச்சயமான கதைகள் தோன்றிய காரணத்தினால் மக்களிடையேயும் அவருடைய ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு ஏற்படுகின்றது. ஓவியங்களோடு மற்றும் நின்றுவிடாமல் அவ்வோயிங்களை பல நகல்களாக அச்சிட்டு அது எளிதில் மக்களிடையே செல்லும் வண்ணம் ஏற்பாடும் செய்கின்றார். இதன் காரணமாக இவ்வோவிய பாணியும் தனக்கென ஒரு அடையாளத்தையும் இடத்தையும் பெற்றுவிடுகின்றது.

இவ்வளவு வரவேற்புடைய ஒரு அணுகுமுறை எவ்வாறு ஒரு இடையூறாக கருதப்படமுடியும்? இதற்கு நாம் இவ்வணுகுமுறையின் தன்மையினை சற்று கவனமாக காணவேண்டும்.

ஒரு குதிரையின் ஓவியத்தினை தீட்டவேண்டுமானால் நாம் முதன்மையாக அறியவேண்டியது அக்குதிரையின் மனோபாவத்தைதான்(temperament), அதன் எலும்புகளையும் தசைகளையும் அல்ல. ஒரு பொருளை ஓவியமாகவோ அல்லது சிற்பமாகவோ வடிக்கும் பொழுது, நாம் தத்துரூபமாக வெளிப்படுத்துவது அப்பொருளின் உள்ளிருந்து அதனை இயங்க செய்யும் விசையையும், சக்தியையும், உணர்வுகளையும் , தன்மைகளையும் தானே தவிர அதன் புற வடிவங்களை அல்ல. இதுவே கிழக்கு சிந்தனை.

ஒளியின் விளையாட்டினால் ஏற்படும் நிழலை தேடி அதை கண்கள் கண்டவண்ணமே ஓவியத்தில் தீட்டுவது மேற்கத்திய அகாடெமிக் அணுகுமுறை. இந்த உலகில் ஒளி நிழல் என்பதே கண்களுக்கு வேற்றுமைகளை அளிப்பதற்காக இயற்கை தீட்டிய ஓவியம் என்று உணர்ந்த கிழக்கு, நிழல்களை எல்லாம் ஒரு பொருட்டாக கொள்ளாமல், பல வண்ண அடர்த்திகள் தரும் இணக்கமான அனுபவத்திற்காகவே வண்ண திண்மைகளை ஓவியங்களில் கையாண்டார்கள்.
 

கிழக்கை திருத்தும் முயற்சியில் மேற்கத்தியர் ஈடுபட்டிருக்கும் சமயம், மேற்கை திருத்தும் வண்ணம் ஒரு முயற்சி அமெரிக்காவில் நிகழ்ந்தது. 1899 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான 'காம்போசிசன் : ஓவிய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஓவிய கட்டமைப்பு பயிற்சிகள்' (Composition: A Series of Exercises in Art Structure for the Use of Students and Teachers) எனும் ஓவிய பாட நூலில், புகழ் பெற்ற ஓவிய ஆசிரியர் ஆதர் வெஸ்லி டவ் (Arthur Wesley Dow), இந்த இரு வேறு அணுகுமுறைகளையும், அவற்றின் வேற்றுமைகளையும் , சரியான அணுகுமுறை கிழக்கினுடையதே எனும் தன் கருத்தினையும் முன்வைக்கின்றார்.

உடற்கூறியல், உளக்கட்சி, ஒளி நிழல் போன்ற இயற்கையின் அம்சங்களை ஒரு விஞ்ஞானி போல அணுகி, பிற ஓவியர்களின் ஓவியங்களை ஓயாமல் நகலெடுத்து பழகும் அகடெமிக் பயிற்சிமுறையை முற்றிலும் நிராகரிக்கின்றார் டவ். அதற்கு மாற்றாக தான் நேரில் பயணித்து கண்ட ஜப்பான், இந்தியா மற்றும் பிற கிழக்கு நாடுகளின் அணுகுமுறையினை கட்டமைத்து அதனையே சரியான ஓவிய பயிற்சியாக பரிந்துரைகின்றார்.

ஓவிய தனிமங்களான கீற்று, வண்ணம் மற்றும் வண்ண திண்மை கொண்டு ஓவியத்தினை ஒரு அழகியல் ரீதியிலேயே வடிவமைக்கபடவேண்டும் என்று பல உதாரணங்களுடன் விவரிக்கின்றது இந்த நூல். வண்ண திண்மை மேற்கில் விஞ்ஞான ரீதியில் கியேரோஸ்க்யுரோவாகவும்(Chiaroscuro), கிழக்கில் அழகியல் ரீதியில் நோடனாகவும்(Notan) அணுகப்படுவதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

ஆதர் டவ்வின் இந்த அணுகுமுறையினால் கவரப்பட்டு அதில் பயணித்து அருமையான ஓவியங்கள் படைத்த புகழ்பெற்ற ஓவியர்களில் ஜார்ஜியா ஓ கீபும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 
இதற்கு மாறாக அகடெமிக் அணுகுமுறை மேலும் 'அகடெமிக் ரியலிசம்' என்பதே சரியான பாணி என்றும் , அதில் ஒரு ஓவியன் பல தசமங்கள் பயணித்து அதனை கடந்து பின்னர் அதனை சிதைத்து, உடைத்து நவீனத்தினுள் புகவேண்டும் எனும் ஒரு பிடிவாதமான அபத்த சிந்தனையினையும் தோற்றுவித்தது.

இந்த அந்நிய சிந்தனையின் திணித்தலை ஏற்கமுடியாத அபநிந்த்ரநாத் தாகூர், அகடெமிக் அணுகுமுறையை முற்றிலும் நிராகரித்து, பண்டைய இந்திய ஓவிய மரபிற்கு ஒரு பின்னோக்கிய பயணத்தினை மேற்கொள்கிறார். பெங்கால் ஸ்கூல் என்றழைக்கப்பட்ட இந்த இயக்கத்தின் அகடெமிக் நிராகரிப்பு , ஒரு வகையில் ஏற்புடையதாக இருந்தாலும் காலத்தில் பின்செல்லுதல் என்பது ஒரு கலை இயக்கத்திற்கு மிகவும் முரணாகவே இருந்தது. பண்டைய ஓவியர்களின் சிந்தனையை மட்டுமின்றி அவர்களுடைய ஓவிய மொழியினையும் மீட்டெடுக்கவேண்டும் எனும் முயற்சியே இந்த முரணுக்கு காரணமானது.

ஓவியம் என்பது அது உருவாக்கப்படும் காலத்தினுடைய குழந்தை என்று கண்டின்ஸ்கி அறிவித்ததை போலவே, ரபிந்த்ரநாத் தாகூர் ஒரு உண்மையான தற்கால ஓவிய பாணியினை உருவாக்கும் நோக்கத்துடன் சாந்திநிகேதனில் பல முயற்சிகளை மேற்கொண்டார். தம்முடைய மண்ணும் மரபும் சார்ந்த ஓவியமாகவும் இருக்கவேண்டும் அதே சமயத்தில் எல்லைகளற்று உலகளாவியதாகவும் இருக்கவேண்டும் என்று எண்ணி செயலாற்றினார்.

அகடெமிக் என்பது ஒரு இடயூராகவே இருந்த போதிலும் காலத்தால் தவிர்க்கமுடியாத பரிணாமத்தில் அதுவும் ஒன்றென கருதி, தம்முடைய மரபில் அதற்கும் ஒரு பங்குண்டெனும் முதிர்ச்சியுற்ற சிந்தனையில் பல ஓவியர்கள் பயணிக்க தொடங்கினார்கள்.

இதுபோன்று ஆழ்ந்து சிந்தித்து பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பயணத்தின் தொடர்ச்சியை தேடிய வண்ணம் நவீனயுகத்தில் பயணித்தன மும்பை, பரோடா மற்றும் சென்னையில் இயங்கிய குழுக்கள்.

இங்கே நாம் காணும் படைப்பு ஆதர் டவ்வின் நூல் வெளியாகிய அதே 1899ஆம் ஆண்டு ராஜா ரவி வர்மாவால் தீட்டப்பட்ட புகழ்பெற்ற 'அன்னமும் தமயந்தியும்' (Hamsa and Dhamayanthi) எனும் அகாடெமிக் பாணி தைலவண்ண ஓவியம்.

    40