வெளி (Space)


 

 
(Painting : Day and Night by M C Escher,1938)

மிகச்சாதாரணமாக அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் வெளி, சற்று சிந்தித்துபார்தால் அதன் அசாதாரண முகங்களை நமக்கு காண்பித்துவிடுகின்றது.

ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையில் உள்ள இடத்தினை நாம் இடைவெளி என்று கூறுகின்றோம். ஒரு பொருள் மற்றொரு பொருளுக்கு மிக அருகில் வந்து விட்டால் இடைவெளி குறைந்துவிட்டதென்கிறோம். அது போலவே இரு பொருட்கள் விலகி சென்றுவிட்ட நிலையில், அவற்றிற்குள்ளுள்ள இடைவெளி அதிகரித்துவிட்டதென்கிறோம்.

ஒரு பூங்காவின் இருக்கையில் ஏற்கனவே இருவர் அமர்ந்திருக்கும் பொழுது அதில் இன்னொருவர் அமருவதற்கு இடம் இல்லை அல்லது போதுமான இடம் இல்லை என்று சொல்கிறோம்.

வெளி என்பது ஒரு இடைவெளியாக பார்க்கபடுகிறது, பல பொருட்களை கொள்ளுகிற இடமாகவும் பார்க்கபடுகின்றது.

வெளி என்பதனை சார்பற்ற தனிதன்மைவாய்ந்த ஒரு இருப்பினைகொண்டதாகவே அணுகுகின்றோம்.

ஒரு ஜாடியினுள் எந்த பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதனுள் இருக்கும் வெளி எவ்வாறு ஜாடியின் வடிவத்தை சார்ந்து இருக்கின்றதோ, அது போலவே வான்வெளியையும் நாம் நினைக்கின்றோம்.

ஓவியர்களும் சிற்பிகளும் வெளியென்பதை மிக கவனமாக கையாளுகிறார்கள். ஒரு புத்தம் புதிய கித்தான் வெள்ளை வெளேரென்று இருக்கும் தருணத்தில், அதில் என்ன உள்ளது என்று யாராவது கேட்டால், பொதுவாக நமக்கு கிடைக்கும் விடை "ஒன்றுமில்லை" என்பதே. யாரும் அந்த கித்தானில் "வெற்று இடம் உள்ளது" என்று கூறுவதில்லை. மேலும் அந்த வெற்று கித்தானில் எவ்வளவு இடம் உள்ளது என்று கேட்டல், யாராலும் அதற்கு விடை கூற இயலாது. "நிறைய இடம் உள்ளது" என்றோ "மிக குறைந்த இடமே உள்ளது" என்றோ யாரும் பதிலாளிப்பதில்லை.

அந்த கித்தானில் ஒரு மிகச்சிறிய வடிவத்தினை கீற்றியவுடன் இந்த கேள்வியின் தன்மை மாறிவிடுகின்றது. உதாரணத்திற்கு ஒரு சிறிய வட்டவடிவத்தினை கித்தானின் ஒரு மூலையில் கீற்றியபின், அந்த கித்தானில் மிக அதிக இடம் உள்ளது என்பது போல தெரியும். அதற்கு மாறாக அந்த கித்தானின் முக்காற்பங்கு அளவிருக்கு ஒரு வட்டத்தினை வரைந்து பார்த்தோமேயானால், அந்த கித்தானில் உள்ள இடம் மிக குறைவாக தெரியும்.

இதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் உண்மையில், வெளி என்பது கித்தானில் இருந்திருக்கவேயில்லை, ஒரு வடிவத்தின் வரவின் காரணமாகவே வெளி உண்டாகியிருக்கின்றது.

இது சற்று விந்தையாகவே இருக்கிறது. ஒரு இடம் அல்லது வெளி இருக்கின்றது, அதனுள் பொருட்கள் இருக்கின்றன என்பதே நமது உள்ளுணர்வின் புரிதல். ஆனால் ஒரு பொருளோ வடிவமோதான் வெளியினையே உண்டாக்குகின்றது என்பதை இங்கே கித்தானில் காண்கிறோம்.

விஞ்ஞானிகள் பல காலமாக ஆராய்ந்து வரும் வெளி எனும் கருத்துருவம் பல விளக்கங்களை கொண்டதாகவே திகழ்கின்றது. உள்ளுணர்விற்கு முரணாகவே அதன் தன்மைகள் இருப்பதாக கண்டெடுக்கபட்டிருக்கின்றது. வெளி வளைந்துவிடுவதாகவும், விரிந்து சுருங்குவதாகவும் பல பரிசோதனைகளும் ஆய்வுகளும் நமக்கு தெரிவிக்கின்றன.

வெளி என்பது மிக முக்கியமான ஓவிய தனிமம். ஒரு ஓவியத்திலுள்ள வடிவங்களை சுற்றயுள்ள வெற்றிடங்களே அந்த கித்தானில் வெளியினை வரையறுக்கின்றது. பார்வையாளரின் கண்களை வடிவங்கள் எவ்வளவு கவருகின்றதோ அதுபோலவே அதை சுற்றியிருக்கும் வெளியும் அந்த வெளியின் வரம்புகள் ஏற்படுத்தும் எல்லைகோடுகளும் நம் கண்களைகவருகின்றன. ஓவியமொழியில் இதை எதிர்மறைவெளி (Negative Space) என்று அழைக்கிறோம்.

உண்மையில் இந்த வெளியானது நம் கண்களுக்கு இளைப்பாற பல அமைதியான இடங்களை ஒரு ஓவியத்தில் உருவாக்குகின்றது. பல நேரங்கள் வடிவங்களைவிட இந்த வெளியிலேயே நாம் ஒரு ஓவியத்தில் பயணிக்கின்றோம். அர்த்தங்களுடைய வடிவங்களின் மத்தியில் அர்த்தமற்றிருந்து ஒருவித நிம்மதியினை அது நமக்கு அளிப்பதால் கூட நாம் இவ்வாருசெய்யகூடும்.

நீர்வண்ண ஓவியத்தின் சவால்களில் சில , தீட்டியபின் அதனை மாற்றிவிட முடியாதென்பதும், அடர்த்தியான வண்ணங்களின் மீது அடர்த்திகுறைவான வண்ணங்களை தீட்டமுடியாது என்பதோடு மட்டுமல்லாமல் கருமையான வண்ணங்களின் மீது வெண்மையினை ஏற்றமுடியாதென்பதும் ஆகும். அதன் காரணமாகவே சில சமயங்களில் வெண்மையான வடிவங்களை தீட்டுவதற்குபதில் அதை சுற்றியுள்ள கருமையான வெளியினை நீர்வண்ண ஓவியர்கள் தீட்டுவார்கள். வடிவங்களை விடுத்து வெளியினை தீட்டும் இம்முறைக்கு எதிர்மறைதீட்டுதலென்று(Negative Painting) பெயரும் சூட்டுகிறார்கள்.

நேர்மறை, எதிர்மறை என்று கித்தானை வெளியின் மூலமாக அணுகி ஒரு சமநிலையான ஓவியத்தினை சாத்திய படுத்துகிறார்கள். புகைப்படக்கலையின் மிக முக்கிய தனிமமாக இந்த இரு வெளிகள் கருதப்படுகின்றன. அதனை கையாளும் முறையில் மிக உணர்வுபூர்வமான பரிமாற்றங்களை படைப்பாளியும் ரசிகனும் பகிர்ந்துக்கொள்கிறார்கள்.

கித்தானிலும் சரி நாம் காணும் இந்த பரந்த உலகிலும் சரி, எல்லைகளற்ற விண்வெளியேயானாலும் சரி எவ்வளவு பெரிய வெளியாக இருந்து நமக்கு ஒருவித பிரம்மாண்ட அனுபவத்தினை அது அளித்தாலும் அது சார்பற்றதொரு இருத்தல் கொண்டதல்ல , மாறாக அது அங்கே உள்ள வடிவங்களால் மட்டுமே சாத்தியப்படும் ஒரு கருத்துருவம் என்பது விநோதமாகவே உள்ளது.

டச்சு ஓவியர் எம்.சி. எஸ்ஷெர் (M.C Escher)எதிர்மறை வெளியினை சற்று வித்தியாசமாக அணுகுவதில் பெயர்போனவர். இங்கே நாம் காணும் அச்சுப்பிரதி , அவர் 1938ஆம் ஆண்டு படைத்த பகலும் இரவும் (Day and Night) எனும் தலைப்புயடைய மிக முக்கிய படைப்பு. இங்கே நாம் பகலும் இரவும் இணைவதையும், வானமும் பூமியும் இழைவதையும் காண்கின்றோம். அவர் வெளியினை கையாண்டிருக்கும் அற்புதத்தினை வயல்வெளிகள் பறவைகளாக உருமாறுதலிலும் , இரு திசைகளில் பயணிக்கும் பறவைகளாக நேர்மறை வெளியும் எதிமறை வெளியும் ஏற்படுத்தும் பரிமாற்றதின் மூலமாகவும் உணரலாம்.

    78